சீட்டு நடத்தி 4 கோடி மோசடி செய்த தம்பதி தனிப்படை போலிசாரால் கைது
திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டில் கணவன் மனைவி இருவரும் சீட்டு நடத்தி சுமார் 4 கோடி ரூபாய்க்கு மேல் சீட்டு மோசடி செய்தவர்களை ஆவடி காவல் ஆணையரக தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு, பெருமாள் பட்டு பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா- பிரேம் ஆனந்த் ஆகிய இவர்கள் இருவரும் கணவன் மனைவி.
இவர்கள் ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு சீட்டு, மளிகை பொருட்கள்சீட்டு, நகை பண்டுசீட்டு என்று விதவிதமான சீட்டு வகைகளை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளனர்.
தற்போது தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பட்டாசு பண்டு, நகைப் பண்டு, மளிகை பண்டு போன்ற பண்டுகளில் சேர்ந்த சுமார் 1000 நபர்களுக்கு மேல் பட்டுவாடா செய்ய வேண்டும். ஆனால் சீட்டில் இணைந்தவர்களுக்கு பட்டுவாடா செய்யாமல் அந்தப் பணத்தை சுருட்டிக் கொண்டு குடும்பத்தோடு தலைமறைவானார்கள்.
இந்நிலையில் கடந்த 14ந் தேதி 100-க்கும் மேற்பட்டோர் ஆவடி காவல் ஆணையரகத்தில் சீட்டு நடத்திய தம்பதியர் பிரேம் ஆனந்த்-45 மஞ்சுளா-40 மற்றும் இவரது உறவினர் விக்னேஸ்வரி என்கிற (அம்மு)-31 ஆகிய மூன்று பேர் மீது மோசடி செய்து தலைமறைவாகி விட்டதாக புகார் அளித்தனர்.
அந்த புகாரில் ஏலச்சீட்டு, நகை பண்டுசீட்டு நடத்திய தம்பதியரிடம் பணம் கட்டியவர்கள், மஞ்சுளாவிடம் பணத்தை திருப்பி தருமாறு கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி அவரது இல்லத்தில் சென்று கேட்டுள்ளனர். அவரும் பணத்தை திருப்பி தருவதாகவும், தன் மேல் புகார் எதுவும் அளிக்க வேண்டாம் எனவும், கேட்டுக் கொண்டுள்ளதால் இதுவரை புகார் அளிக்காமல் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
14 தேதி அன்று சீட்டு நடத்திய தம்பதியர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர்கள் குடியிருந்த சொந்த வீட்டையே சத்தம் தெரியாமல் வேறொருவருக்கு விற்றுவிட்டு தலைமறைவாகியுள்ளது தெரியவந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சீட்டு கட்டி ஏமாந்தவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஆவடி காவல் ஆணையரகத்தில் பண மோசடி செய்த கணவன் மனைவி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க கோரியும் ஆவடி காவல் ஆணையரகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை போலீசார் மயிலாடுதுறை, சீர்காழியில் பதுங்கி இருந்த தம்பதியரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் ஆவடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.