ஜெயங்கொண்டம் அருகே நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டு, கல்லூரி மாணவரை காரில் கடத்திச் சென்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவ்வழக்கில் தலைமறைவான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள குருவாலப்பர்கோவில் உடையார் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 65). இவருடைய மகன் சஞ்சய்(வயது 21). கும்பகோணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட செல்வதற்காக வீட்டை விட்டு வெளியில் வந்தார். அப்போது வீட்டின் அருகில் திடீரென வந்த வெள்ளை நிற மாருதி கார் ஒன்றில் நான்கு பேர் கொண்ட கும்பல் சஞ்சய்யை கடத்திச் சென்று அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டாா்கள்.
பின்னர் இதுகுறித்து சஞ்சையின் தந்தை சந்திரசேகர் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து மீன்சுருட்டி போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வந்தநிலையில் குற்றவாளிகள் மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியில் பதுங்கி இருந்ததாக தகவல் அறிந்த காவல்துறையினா் காரை மடக்கி பிடித்தபோது, காரில் இருந்த நான்கு பேரில் இரண்டு பேர் தப்பி ஓடி விட்டனர். காரில் இருந்த இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினாா்கள்.
அரியலூர் மாவட்டம் காட்டு பிரிங்கியம் அய்யா நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் மார்க்கோனி( வயது 39), அரியலூர் ரயில்வே கேட் எத்திராஜன் நகரை சேர்ந்த அசோகன் மகன் சக்தி ( வயது 31), அரியலூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 38), மற்றும் வினோத் ஆகிய 4 பேர் சஞ்சையை கடத்தியது தெரியவந்தது. இதையெடுத்து கடத்தப்பட்ட சஞ்சயை மீட்டு காரில் கடத்திய மார்க்கோனி மற்றும் சக்தி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடி தலை மறைவான வினோத், கார்த்திக் ஆகிய இரண்டு பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில், அரியலூர் ஓடைக்கார தெருவை சேர்ந்த வினோத் என்பவருக்கு, கடத்தப்பட்ட சஞ்சையின் உறவினரான மதுரையில் வசிக்கும் பிரேமலதா என்பவர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பங்குச்சந்தையில் அதிக பணம் பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி ரூபாய் 23 லட்சத்தை பெற்றுக் கொண்டு, பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சஞ்சைய் மூலம் பிரேமலதாவை கண்டுபிடிப்பதற்காக, சஞ்சயை காரில் கடத்தி சென்றதாக போலீசாரிடம் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஜெயங்கொண்ட பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பூட்டிய அறைக்குள் மரண பயம்… குடும்பத்தை நினைத்து கண்ணீர் விட்ட இளையராஜா..!