ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாகி இருந்து வரும் ரவுடி சம்போ செந்திலை பிடிக்க துபாய்க்கு விரைகிறது சென்னை காவல்துறை. இன்னும் ஓரிரு தினங்களில் தனிப்படை போலீசார் துபாய்க்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் A1 குற்றவாளி நாகேந்திரன் உள்ளிட்ட 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் காவல்துறையினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். காவல்துறை நடத்திய விசாரணையை அறிக்கையாக தயாரித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். சுமார் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் A2 குற்றவாளியான சம்போ செந்தில் பெயர் இடம்பெற்றுள்ளது. அவர் தலைமறைவாக இருந்து வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் என்கிற சம்போ செந்தில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சட்டக்கல்லூரியில் படித்துள்ளார். அதன் பின்னர் சிறிது காலம் வழக்கறிஞராகப் பயிற்சி எடுத்து வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.
அப்போது அவருக்கு சென்னையில் முக்கிய ரௌடிகள் சிலரின் அறிமுகம் கிடைத்துள்ளது. ரௌடிகளுக்கு ஜாமீன் பெற்றுத்தந்து வந்த செந்தில்குமார், அவர்களுக்கு ஆலோசகராகவும் இருந்துள்ளார்.
செந்தில்குமார் ரௌடிகளுக்கு ஆலோசனை வழங்குவதிலும் ஸ்கெட்ச் போட்டு கொடுப்பதிலும் திறமை வாய்ந்தவராக இருந்துள்ளார். அவர் ஸ்கெட்ச் போட்டு கொடுத்தால் அது மிஸ்ஸிங் ஆனதே கிடையாது என்று ரௌடிகள் மத்தியில் பேசப்பட்டது. அதனால் செந்தில்குமார் காலப்போக்கில் சம்பவம் செந்திலாக மாறினார். அதன் பின்னர் தனி தாதாவாக உருவெடுத்துள்ளார். அப்போதிலிருந்து சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் தலைமறைவாக வாழ்ந்து வருகின்றார்.
இந்த நிலையில் தான் ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய பங்காற்றியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் வளர்ச்சியினால் பாதிக்கப்பட்டது யார்?ஆம்ஸ்ட்ராங் மீது யார் யார் கோபத்தில் இருக்கிறார்கள்? என்ற பட்டியலை தயாரித்து, அவர்களை ஒருங்கிணைத்து, கொலை செய்ய திட்டமிட்டது போன்ற முக்கிய வேலைகளை செய்தது சம்போ செந்தில் தான் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்போ செந்தில் யார் என்பது பழைய வரலாறுகளை தவிர்த்து பெரியதாக போலீசாருக்கு செந்தில் தொடர்பான விபரம் எதுவும் தெரியாது. அவர் தற்போது எப்படி இருப்பார் என்கிற புகைப்படம் கூட காவல்துறையிடம் இல்லை.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ2 வாக குற்றப்பத்திரிகையில் சம்போ செந்தில் பெயரை சேர்த்துள்ளனர். அதனால் அவரை பிடித்தே தீரவேண்டும் என்ற நெருக்கடி போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்கு மேல் தலைமறைவாக இருந்து வரும் சம்போ செந்தில், துபாயில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் சென்னை தனிப்படை போலீசார் விரைவில் துபாய் செல்ல உள்ளனர்.