திருப்பதி லட்டு விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் பிரபல நிறுவனத்திடம் நெய்யை வாங்கியது அம்பலமாகியுள்ளது. தெலுங்கானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டதுதான் கலப்பட நெய் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள மத்திய உணவு பாதுகாப்புத்துறை, நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு பரிந்துரைத்துள்ளது.
உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில், முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் போலீசில் புகார் அளித்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு விநியோகித்த நெய்யில் கலப்படம் செய்ததாக திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான கொள்முதல் பிரிவு பொது மேலாளர் முரளி கிருஷ்ணா புகார் அளித்தார். திருப்பதி கோயிலுக்கு விநியோகித்த நெய்யில் நிபந்தனைகளை மீறி கலப்படம் செய்து 4 டேங்கர் லாரிகளில் ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் விநியோகம் செய்ததாக அந்த புகார் மனுவில் குற்றம்சாட்டப்பட்டது.
டிஜிட்டல் அரஸ்ட் என்ற முறையில் 4.67 கோடி ரூபாய் மோசடி,13 பேர் கைது
ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம், தெலுங்கானாவைச் சேர்ந்த வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தில் இருந்து அந்த நெய்யை வாங்கியுள்ளது எனவும் அங்கு தயாரிக்கப்பட்டதுதான் கலப்பட நெய் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. கலப்பட நெய் தொடர்பாக, தெலுங்கானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வைஷ்ணவி நிறுவனத்துக்கு மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.