ஐதராபாத் அருகே மாந்திரீகம் பீதியில் கிராம மக்கள் பெண் ஒருவரை மூடநம்பிக்கையினால் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் கத்ரியாலா கிராமத்தை சேர்ந்த தியாகலா முத்தவா (45). இவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார். முத்தவா விவசாய வேலை செய்து கொண்டு கிராமத்தில் உள்ள எல்லோரிடமும் பேசி நெருக்கமாக இருந்துள்ளார்.
ஆனால் முத்தவா வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மாந்தீரிகம் செய்வதாக கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. முத்தவ்வா செய்யும் மாந்திரீகம் பூஜையினால் கிராமத்தில் உள்ளவர்களுக்கு உடல் நல பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுவதாக கிராம மக்கள் நம்பினர்.
இதனால் முத்தவ்வாவை கொல்லத் திட்டமிட்டு கிராமத்தை சேர்ந்த சிலர் வியாழக்கிழமை இரவு முத்தவ்வா வீட்டுக்குச் சென்றனர். வீட்டில் இருந்து முத்தவ்வா மாந்திரீகம் செய்வதாக சந்தேகமடைந்த மூடநம்பிக்கை கும்பல் கையுடன் கொண்டு சென்ற பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்தனர்.
தீப்பிழம்புகளால் எரிந்து கொண்டு அலறிய சத்தம் கேட்டதால் மகனும், மருமகளும் தாங்களும் தாக்கப்படுவோம் என்று பயந்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பெண்ணின் முத்தவ்வாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சிலர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் கிராம மக்கள் அவர்களை தடுத்து நிறுத்தி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயை அனைத்து முத்தவ்வாவை ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே முத்தவா உயிரிழந்தார்.
இதனால் உடல் ராமயம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி. உதய்குமார் ரெட்டி, டிஎஸ்பி வெங்கட ரெட்டி, இன்ஸ்பெக்டர் வெங்கடராஜா கவுட் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
முத்தவ்வா கணவர் பாலய்யா புகாரின்படி கிராமத்தை சேர்ந்த திகல ராமசாமி, முரளி, சேகர், லட்சுமி, ராஜ்யலதா, மகாலட்சுமி, போச்சம்மா ஆகிய 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.