மயிலாடுதுறையில் திருமணமான இளம் பெண்களை குறிவைத்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பணம், நகைகளை பறித்து மோசடி செய்த இளைஞர் மீது பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ் என்பவரது மகன் ஜாகிர்உசேன் (28). இவர் தர்காக்களில் சந்தனம் பூசு விழாவின்போது குடும்பத்தாருடன் தரைக்கடை அமைத்து ஃபேன்சி பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். அப்போது, தன்னிடம் பொருள் வாங்கும் இஸ்லாமிய பெண்களிடம் பேச்சுக்கொடுத்து அவர்களைப்பற்றி அறிந்துகொண்டு கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், திருமணமான பெண்களுக்கு வலைவீசி அவர்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுவார்கள். அதன் பின்னர் அந்த பெண்களிடம் ஜாகிர்உசேன் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருப்பதுடன், அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு விரட்டிவிட்டு விடுவார்கள். ஏமாற்றப்பட்ட பெண்கள் எதிர்த்து கேட்டால் இருவரும் தனிமையில் இருந்தபோது எடுத்த ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி வந்துள்ளார் .இதனால் பல பெண்கள் ஜாகிர் உசேன் மீது புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.
இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளுரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஷிபானா ஜாஸ்மின் என்பவர் சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, ஷிபானாவின் நண்பர் மூலம் ஜாகிர் உசேன் அறிமுகமாகியுள்ளார். கணவரை பிரிந்தவரான ஷிபானாவிடம் நட்பாக பழகி வந்த ஜாகிர் உசேன், பின்னர் அவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார். அதனை நம்பி ஷிபானாவிடம் இருந்து ரூ.2 லட்சம் பணம், 14 சவரன் நகை ஆகியவற்றை சிறிது சிறிதாக கைப்பற்றியுள்ளார். இதற்கிடையே கடந்த ஆண்டு ஜாஸ்மினை கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு ரெசிடென்சிக்கு அழைத்துச்சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து யாரிடமும் கூற வேண்டாம் என்றும், தானே திருமணம் செய்து கொள்வதாகவும் ஜாஸ்மினிடம் கூறியுள்ளார். மீறினால் அவரது ஆபாச வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும், கடந்த மார்ச் மாதம் ஷிபானாவை திருவாவடுதுறைக்கு வரச்சொல்லி அங்கு ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் ஜாஸ்மின் கர்ப்பம் அடைந்துள்ளார். இதனை அறிந்த ஜாஹீர் உசேன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஷிபானாவுக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை வலுக்கட்டாயமாக ஊட்டி, அவரது கர்ப்பத்தை கலைத்துள்ளனர். அத்துடன் ஜாஷ்மினை அடித்து உதைத்து விட்டு வெளியில் தள்ளி விட்டனர்.இதுகுறித்து குத்தாலம் காவல் நிலையத்தில் விசாரித்தபோது ஜாஸ்மின் அழைத்துச்சென்று மீண்டும் கொடுமைப்படுத்தி விரட்டி விட்டனர்.
மேலும் ஜாகிர்உசேன் செல்போனில் பல்வேறு பெண்களின் படங்களும், செல்போன் எண்களும் இருந்தது குறித்து விசாரித்தபோது இவர் பல பெண்களை ஏமாற்றியுள்ளதும் தெரியவந்தது. பல பேர் வெளியே சொன்னால் குடும்ப மானம் போய்விடும் என்று பயந்துகொண்டு இருந்துள்ளதும் தெரிய வந்ததால் கடந்த நவம்பர் மாதம் ஷிபானா மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் மகளிர் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே தேரழுந்தூர் பகுதியை சேர்ந்த திருமணமான உறவுக்காரண பெண்ணையும், ஜாகிர் உசேன் திருமணம் செய்வதாக ஏமாற்றி நகை, பணம் மற்றும் அவரது தாயார் பெயரில் இருந்த வீட்டின் பத்திரம் ஆகியவற்றை பிடிங்கிக்கொண்டு விரட்டி அடித்துள்ளார். 10 பவுன் நகை, ரொக்கம் மற்றும் அவரது வீட்டு பத்திரத்தை மீட்டுக் கொடுக்க சொல்லி கண்ணீர் மல்க அப்பெண்மணி வாட்ஸ் அப்பில் பேசி அனுப்பியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து அழுத்தம் அதிகரித்ததால் ஜாகிர் உசேன் நாகை மாவட்டம் திட்டச்சேரியில் தற்பொழுது வசிப்பிடத்தை மாற்றி விட்டார்.
இந்த நிலையில், திருமணமான பெண்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட ஜாகிர் உசேன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஷிபானா ஜாஸ்மின், தமுமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மோசடி செய்த நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை டிஎஸ்பி பாலாஜி, பாதிக்கப்பட்டவர்களை நேரில் அழைத்து விசாரித்து உண்மை நிலையை கண்டறிந்து ஜாகிர் உசேன் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து, மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுகந்தி மற்றும் போலீசார் ஜாகிர் உசேனை அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 417, 420, 506 (i), 354(A) பா.நி.சட்டம் 69 என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஜாகிர் உசேனைக் கைதுசெய்து, மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும், ஜாகிர் உசேனின் குடும்பத்தினர் மீதும் வழக்கு பதிய வேண்டும் என்று தமுமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, காவல் நிலையம் முன்பாக அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தமுமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.