சென்னை கிளாம்பாக்கத்தில் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை மாதவரத்தில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக சேலத்தில் இருந்து 19 வயது இளம்பெண் ஒருவர் கடந்த திங்கட்கிழமை இரவு கிளாம்பாக்கத்திற்கு வந்துள்ளார். பின்னர் மாதவரம் செல்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றியதாகக் கூறப்படுகிறது. பின்னர் ஜி.எஸ்.டி. சாலை வழியாக இரும்புலியூர் சாலையில் சென்றபோது ஆட்டோவில் இருந்தவர்கள் அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.
ஆட்டோவில் பெண் கூச்சலிடுவதை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் போலிசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தாம்பரம் போலிசார், ஆட்டோவை விரட்டிச்சென்றனர். அப்போது, ஆட்டோவில் இருந்தவர்கள் நெற்குன்றம் அருகே அந்த பெண்ணை இறக்கிவிட்டு தப்பிச்சென்றனர். பின்னர் போலிசார் அந்த பெண்ணை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சம்பவம் தொடர்பாக பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 5 பேரை பிடித்து விசாரித்து வந்தனர்.
இதில் ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ்செல்வன் (56), தயாளன் (45) ஆகிய இருவரை இன்று போலிசார் கைது செய்தனர். இதில் தயாளன் என்பவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.