கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் மர வியாபாரியை கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெரம்பூர் ஜமாலியா பி.எச் சாலை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்(52). இவர் தனது மனைவி திரிபுரா, தனது மகன் பாபு,அபினவ் ஆகியோருடன் வசித்து வருகிறார். பாஸ்கர் பெரிய மேட்டில் மர வியாபாரம் செய்து வருவதுடன், பள்ளிகளுக்கு தேவையான டேபிள், நாற்காலி ஆகியவற்றை செய்து தரும் தொழிலையும் செய்து வருகின்றார்.
பாஸ்கர் தனது வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால் அதற்கு தேவையான பொருட்களை தனது வீட்டருகே வைத்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் (37) என்பவர் தனது காரை நிறுத்துவதற்கு இடையூறாக சாலையில் பொருட்களை போட்டு வைத்துள்ளதாக கூறி பாஸ்கர் மனைவி திரிபுராவிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட திராபுரா இது குறித்து தனது கணவர் பாஸ்கரிடம் கூறியதால் ஆத்திரமடைந்த அவர் உடனே வழக்கறிஞர் கிருஷ்ணகுமாரிடம் சென்று ஏன் இப்படி தினமும் தகராறு செய்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து ஆத்திரமடைந்த வழக்கறிஞர் உடனே காரில் வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து அவரை வெட்ட முயன்றதுடன் இதனை தடுக்க வந்த பாஸ்கர் மகனையும் வெட்ட பாய்ந்துள்ளார்.
அப்போது மகன் உயிருக்கு பயந்து ஓடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாஸ்கர் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த ஓட்டேரி போலீஸார் வழக்கறிஞர் கிருஷ்ணகுமாரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து இதற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
பின்னர் பாஸ்கர் அளித்த புகாரில் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
புகார் பெட்டிகள் வைத்த இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் இல்லையா ? – அமைச்சர் கீதா ஜீவன்