Homeசெய்திகள்க்ரைம்உடற்பயிற்சி கூடத்தில் தகராறு – இருவர் கொலை, ஒருவர் ஆபத்தான நிலை

உடற்பயிற்சி கூடத்தில் தகராறு – இருவர் கொலை, ஒருவர் ஆபத்தான நிலை

-

- Advertisement -

உடற்பயிற்சி கூடத்தில் தகராறு – இருவர் கொலை, ஒருவர் ஆபத்தான நிலை

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் நள்ளிரவில் மூவர் வெட்டப்பட்ட நிலையில் இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து செங்குன்றம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது இருவர் வெட்டுப்பட்டு சடலமாகவும், ஒருவர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதனையடுத்து உடனடியாக 108 அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு வெட்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருந்த இளைஞரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

உடற்பயிற்சி கூடத்தில் தகராறு – இருவர் கொலை, ஒருவர் ஆபத்தான நிலை
உயிரிழந்த விஜய்

உயிரிழந்த இருவரது சடலங்களை கைப்பற்றிய செங்குன்றம் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர்கள் பெருங்காவூரை சேர்ந்த ஸ்ரீநாத் (20), விஜய் (26) என்பதும், அதே பகுதியை சேர்ந்த அஜய்குமார் (27) உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக செங்குன்றம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

உடற்பயிற்சி கூடத்தில் தகராறு – இருவர் கொலை, ஒருவர் ஆபத்தான நிலை
உயிரிழந்த ஸ்ரீநாத்

தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட ஸ்ரீநாத், விஜய் ஆகிய இருவரும் கடந்த 1 மாதத்திற்கு முன் தங்களது ஊரான பெருங்காவூரில் உள்ள சுடுகாட்டில் ஆலமரத்தின் கீழே நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திய போது விச்சூரை சேர்ந்த சிலரை பார்த்து எங்கள் ஊருக்கு வந்து ஏன் ஓசியில் குடிக்கிறீர்கள் என கூறி தகராறில் ஈடுபட்டு விச்சூரை சேர்ந்த ராகுல் என்பவரை தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர்.

இதில் சோழவரம் காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் 6 பேர் தலைமறைவானார்கள். இந்த வழக்கில் காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு அஞ்சி பெருங்கவூரில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் உள்ள கண்ணம்பாளையம் கிராமத்தில் ஸ்ரீநாத், விஜய், அஜய்குமார் ஆகியோர் பதுங்கி இருந்து வந்துள்ளனர்.

உடற்பயிற்சி கூடத்தில் தகராறு – இருவர் கொலை, ஒருவர் ஆபத்தான நிலை
உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அஜீத்குமார்

இதனிடையே தங்களது கிராமத்தில் ஏன் வந்து பதுங்கி உள்ளீர்கள் என அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கேட்டு தகராறில் ஈடுபட்டதாகவும், ஏற்கனவே ஒருவரை வெட்டிவிட்டு தான் இங்கு வந்து பதுங்கி உள்ளோம் என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த சம்பவத்தில் ஏற்பட்ட முன் விரோதத்தில் கொலை நடத்தப்பட்டிருக்கலாம் என்பதால் 3 இளைஞர்களை பிடித்து செங்குன்றம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது கஞ்சா புழக்கம் அதிகரித்து அதன் காரணமாகவே கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். கஞ்சா விற்பனை போட்டியில் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு அஞ்சி வேறு இடத்தில் பதுங்கி இருந்த இருவர் கொலை கொலை செய்யப்பட்டும், ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

MUST READ