சிதம்பரத்தில் மளிகைக்கடை மீது காரை ஏற்றி பொருட்களை நொறுக்கி சேதப்படுத்திய உதவி பேராசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சிதம்பரம் நகரில் வசித்து வருபவர் பாலச்சந்தர் (43). இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு இவர் காசுக்கடைத் தெருவில் உள்ள பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடைக்கு சென்று பொருட்கள் வாங்கியுள்ளார். காசு கேட்டபோது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பாலசந்தர் மது போதையில் இருந்ததாகவும், கடைக்காரர் பிரபாகரனை பாலச்சந்தர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் ஆத்திரம் அடங்காமல் பாலச்சந்தர் வீட்டிற்கு சென்று தனது காரை எடுத்து வந்து கடை மீது இடித்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் பிரபாகரன், அவரது மனைவி சினேகா, கடை ஊழியர் ரவி ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் உதவி பேராசிரியர் பாலசந்தருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கடை உரிமையாளர் பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் பாலச்சந்தர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலச்சந்தர் தற்போது புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், சிகிச்சை முடிந்த பிறகு அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.