கோவையில் புரோட்டாவுக்கு சால்னா கேட்டு தகராறில் ஈடுபட்டு, ஹோட்டல் உரிமையாளரை தலையில் வெட்டிய இருவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர் அமானுல்லா (54). இவர் அதே பகுதியில் பிரியாணி உணவகம் ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் அவரது உணவகத்திற்கு வந்த அதே பகுதியை சேர்ந்த இரண்டு பேர் புரோட்டாவிற்கு கூடுதலாக சால்னா கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது சமையல் அறையில் இருந்து வந்த ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லா இது குறித்து கேட்டுள்ளார். அப்போது இரண்டு நபர்களும் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு முகம் மற்றும் தலையில் வெட்டினர்.
பின்னர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு வெளியே சென்றனர். அப்போது சத்தம் கேட்டு அங்கே பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கூடியிருந்தவர்களிடமும் தகராறில் ஈடுபட்ட இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனிடையே கடையில் இருந்த ஊழியர்கள் அமானுல்லாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த கரீம் மற்றும் சமீர் ஆகிய இருவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் தேடப்பட்டு வரும் கரீம் மற்றும் சமீர் இருவரும் வேறு உணவக உரிமையாளரின் மகன்கள் என்பதும் தொழில் போட்டியால் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.