சேலம் அருகே வனப்பகுதியில் எறும்புத்தின்னியை பிடித்து பல லட்ச ரூபாய்க்கு விற்க முயற்சித்த ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்……
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே டேனிஸ்பேட்டை வனப்பகுதியில் எறும்புத்தின்னியை பிடித்து விற்பனை செய்ய முயற்சித்த ஆறு பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து , நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து எறும்புத்தின்னியை பறிமுதல் செய்து வனப் பகுதியில் விட்டனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள டேனிஸ்பேட்டை வனப்பகுதியில் சிறுத்தை, மான், மாடு, எருமை, பன்றி, எறும்பு தின்னி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. அதேபோல நூற்றுக்கும் மேற்பட்ட பறவை இனங்களும் வாழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் ஒரு கும்பல் வனப் பகுதிக்குள் சென்று வலையை விரித்து எறும்புத்தின்னியை பிடித்து , மருத்துவ குணம் கொண்டது எனக் கூறி பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாக டேனிஸ்பேட்டை வனச்சரகர் தங்கராசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ஆம்ஸ்ட்ராங் வழக்கு : கைதானவர்களிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்
இதனைத் தொடர்ந்து தனி குழு அமைத்து கும்பலை தேடி வந்தனர். அப்போது ஏற்காடு நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த குழந்தை, பழனி, சத்யராஜ் , ஆகிய மூன்று பேரும், எறும்புத்தின்னி ஒன்றினை கோயம்புத்தூரில் வசிக்கும் மூர்த்தி என்பவருக்கு 3 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றுள்ள தகவல் அறிந்த வனச்சரகர் தங்கராஜு தலமையிலான குழுவினர், எறும்புத்தின்னியை விற்பனை செய்ய முயன்ற 3 பேரையும், விலைக்கு வாங்கிய மூர்த்தி உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து , எறும்புத்தின்னியை மீட்டு வனப்பகுதியில் விட்டனர். தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து பிடிப்பட்ட நான்கு பேரிடம் நடத்திய விசாரணையில் வனப்பகுதியில் வலை விரித்து எறும்புத்திண்ணியை பிடித்து , அது மருத்துவ குணம் கொண்டது எனக் கூறி விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து எறும்புத்தின்னியை மருந்துக்கு பயன்படுத்தி பல லட்ச ரூபாய்க்கு விற்பனை பேசிய கருவூரை சேர்ந்த மணிவாசகன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரண்டு பேரையும் வனத்துறையினர் பிடித்தனர்.
பின்னர் பிடிபட்ட குழந்தை ,பழனி , சத்யராஜ், மூர்த்தி, மணிவாசகன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய ஆறு பேர் மீதும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து , ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
விரைந்து செயல்பட்ட வனக்குழுவிற்கு சேலம் மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி பாராட்டு தெரிவித்தார்.