காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மகனுக்கு சூனியம் வைத்ததாக கருதி, இளைஞரை தீர்த்து கட்டிய தந்தை- 10 நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஒட்டந்தாங்கள் பகுதியை சேர்ந்தவர் முருகன் (35). இவர் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு பாக்கியலட்சுமி என்பவரை திருமணம் ஆகி மூன்று வயதில் பெண் குழந்தைகள் உள்ளன.
முருகன் திருவண்ணாமலை மாவட்டம் மாங்கால் சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும், லோட்டஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
தினமும் ஒட்டந்தாங்கள் கிராமத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் , தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் கடந்த மாதம் 27ஆம் தேதி, வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது இரவு 11 மணி அளவில், காட்டுப்பாக்கம் சாலையோரம் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருப்பதாக உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் , விபத்தில் இந்த உயிரிழப்பு நடந்திருக்கலாம் என சந்தேகத்தினர்.
தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்தவர் உடல் முருகன் என தெரிய வந்தது. உடனடியாக பிரேதத்தை கைப்பற்றிய உத்திரமேரூர் போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உத்திரமேரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் தன் கணவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என, உத்திரமேரூர் காவல் நிலையத்தில் முருகன் மனைவி பாக்கியலட்சுமி பரபரப்பு புகார் அளித்தார். மேலும் தனது கணவர் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதால் , கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என கணவரை சடலத்தை பெற மறுத்து போராடி வந்தார்.
இதனை அடுத்து மனைவி பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், முருகன் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.
இந்தநிலையில், முருகன் கொலை தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பெரியவேலியநல்லூர் பகுதியைச் சேர்ந்த 8 பேரை உத்திரமேரூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டு உயிரிழந்த முருகன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த விஜயன் என்பவருக்கும் சில ஆண்டுகளாக நிலப் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
மேலும் விஜயனின் ஒன்பது வயது மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார். தன் குடும்பம் நல்லா இருக்கக் கூடாது என எண்ணிய முருகன் தான் தனது மகனுக்கு சூனியம் வைத்ததாக விஜயன் கருதி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தனது மகனின் சாவுக்கு பழிவாங்க எண்ணிய விஜயன் முருகனை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி கடந்த மாதம் 27 ஆம் தேதி காட்டுப்பாக்கம் பகுதியில் வைத்து கூலிப்படை உதவியுடன் இந்த கொலைச் சம்பவம் நடைபெற்று இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.