Homeசெய்திகள்க்ரைம்குறைந்த விலையில் நகை ; டாக்ஸி ட்ரைவரிடம் 12 லட்சம் மோசடி; வசமாக சிக்கிய பெண்

குறைந்த விலையில் நகை ; டாக்ஸி ட்ரைவரிடம் 12 லட்சம் மோசடி; வசமாக சிக்கிய பெண்

-

- Advertisement -

சுங்க வரித்துறையிடம் நகைகளை வாங்கி குறைந்து விலைக்கு விற்பனை செய்வதாகக் கூறி டாக்ஸி ஓட்டுநரிடம் ரூ.12.4 லட்சம் மோசடி செய்த பெண் உட்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.


கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன் (50). டாக்ஸி ஓட்டுநரான இவர் கடந்த சில மாதங்களாக கோவை ரத்தினபுரி கண்ணப்பநகரை சேர்ந்த அமுதா (44). என்ற பெண்ணிற்கு வாடகை கார் ஓட்டியுள்ளார். காரில் செல்லும் அமுதா கோவை 100 அடி சாலை, ராஜ வீதி, கிராஸ் கட் சாலைகளில் உள்ள நகைக் கடைகளுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அமுதா அடிக்கடி நகைக்கடைகளுக்குச் செல்வது குறித்து டாக்ஸி ஓட்டுனர் சின்னப்பன் விபரம் கேட்டுள்ளார்.

அப்போது தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பறிமுதல் செய்யப்படும் தங்கத்தில் ஒரு பகுதியை கோவையில் உள்ள நகைக் கடைகளுக்கு கொடுப்பதாகவும், இதனால் தனக்கு சந்தை விலையை விட மிக குறைவாக கிடைக்கும் எனக் கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய சின்னப்பன் தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த ரூ.12.4 லட்சத்தை அமுதாவிடம் கொடுத்து நகைகளை வாங்கித் தருமாறு கூறியுள்ளார்.

அதனை பெற்றுக் கொண்ட அமுதா நீண்ட நாட்களாக நகையும் கொடுக்காமல் பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து அடிக்கடி சின்னப்பன் கேட்ட நிலையில் அமுதா தனது செல்போன் எண்ணையும் மாற்றியுள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சின்னப்பன் கோவை ரத்தினபுரி போலீஸில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அமுதா (44) மற்றும் அவருக்கு உதவிய பிளஸ் போர்டு பணி செய்து வரும் இமாம் கசாலி (27) ஆகிய இருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அமுதாவிடம் மேற்கொண்ட விசாரணையில் : அமுதா கோவையில் உள்ள பல்வேறு நகைக்கடைகளில் ஒரு கிராம் தங்க நாணயம் வாங்கிக்கொண்டு, அதனுடன் 4 அல்லது 5 காலி பெட்டிகளை கூடுதலாக பெற்று வந்துள்ளார். மேலும் 5 கிராம் எடைக் கொண்ட போலி தங்க நாணயங்களையும் அமுதா வாங்கியுள்ளார். அவ்வாறு வாங்கும் உண்மையான தங்க நாணயங்களை தனக்கு தெரிந்த நகை பட்டறை ஊழியர்களிடம் கொடுத்து உருக்கி, போலி நாணயத்தின் மீது 2 அல்லது 3 கோட்டுகள் பூசியுள்ளனர். இதை கொண்டு 6 முதல் 8 கிராம் வரை தங்க நாணயம் எனக்கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் மோசடி செய்து வந்ததும் தெரியவந்தது. இந்த நகைகளை சின்னப்பன் உண்மை என நம்பி நகைகள் வாங்க பணம் கொடுத்தது தெரியவந்தது. மேலும் அமுதாவின் மோசடிக்கு பல்வேறு வகைகளில் இமாம் கசாலி உதவியதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் மீது 4 பேர் புகார் அளித்துள்ள நிலையில், சுமார் 30 க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது .

MUST READ