Homeசெய்திகள்க்ரைம்இருசக்கர வாகனங்களை திருடி வந்த தில்லாலங்கடி திருடன் கைது

இருசக்கர வாகனங்களை திருடி வந்த தில்லாலங்கடி திருடன் கைது

-

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி வந்த தில்லாலங்கடி திருடன் கைது. வீட்டில் பதுக்கி வைத்திருந்த வாகனங்களின் 15 இன்ஜின்கள், 16 சேஸ் பிரேம் பறிமுதல். இருசக்கர வாகனங்களை திருடி அக்குவேர் ஆணிவேராக கழற்றி பாகங்களை விற்று வந்த திருடன் சிக்கியது எப்படி.

இருசக்கர வாகனங்களை திருடி வந்த தில்லாலங்கடி திருடன் கைதுசென்னை புழல் அடுத்த புத்தகரத்தை சேர்ந்தவர் முருகவேல் (62). இவர் கடந்த மாதம் 2ஆம் தேதி புழல் அடுத்த காவாங்கரை பகுதியில் உள்ள மீன் இறைச்சி சந்தைக்கு வந்து தமது ஹோண்டா ஷைன் இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு மீன் வாங்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம்  காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனை தொடர்ந்து தமது இருசக்கர வாகனம் திருடு போனது தொடர்பாக புழல் காவல் நிலையத்தில் முருகவேல் புகார் அளித்தார். இதே போல பாடியநல்லூரை சேர்ந்த பிரபு (36) என்பவர் கடந்த மாதம் 16 ஆம் தேதி  மீன் வாங்குவதற்காக தமது ஹோண்டா யுனிகார்ன் இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு காவாங்கரை மீன் சந்தைக்கு உள்ளே சென்று மீன் வாங்கி கொண்டு திரும்பி வந்தார். அப்போது தமது இருசக்கர வாகனம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த இருவேறு சம்பவங்கள் தொடர்பாக புழல் போலீசார் ஐபிசி 379ன் கீழ் தனித்தனியே திருட்டு வழக்குகள் பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மீன் சந்தை மற்றும் சாலையில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மீன் சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்களை மர்ம நபர் ஒருவர் திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

15 நாட்கள் இடைவெளியில் நடைபெற்ற இரண்டு திருட்டு சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டது தெரிய வந்தது. திருட்டில் ஈடுபட்ட நபரின் புகைப்படத்தை குற்ற ஆவண காட்சிகளுடன் ஆய்வு செய்ததில் ஏற்கனவே சிறை சென்ற பிரபல திருடன் என தெரிய வந்தது. இதனையடுத்து திருவேற்காடு பகுதியை சேர்ந்த முருகன் (37)  வீட்டிற்கு சென்று கைது செய்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 வாகன எஞ்சின்கள், 16வாகன சேஸ் பிரேம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். புழல் காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

சென்னையில் மக்கள் கூட்டம் அதிகம் சேரும் இடங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை திருடி பாகங்களை கழற்றி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் வாகனங்களை திருடி அதன் பாகங்களை கழற்றி விற்பனை செய்து வந்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனங்களை திருட சென்றாலே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் திருடன் என்பதை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த முருகன் தனது தொழில் செய்யும் இடத்தை மாற்ற முடிவு செய்து கோயம்பேடு சந்தையில் கைவரிசை காட்ட தொடங்கியுள்ளார். கோயம்பேடு சந்தையில் சில இருசக்கர வாகனங்களை திருடிய பின்னர் அங்கும் போலீசார் தம்மை அடையாளம் கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக மீண்டும் இடத்தை மாற்றியுள்ளார். சென்னை புறநகரான புழல் அடுத்த காவாங்கரையில் உள்ள மீன் சந்தைக்கு வந்து கைவரிசை காட்டியுள்ளார்.

சாலையோரம் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை உடனே திருடி விடாமல் இருசக்கர வாகனத்தை அதன் உரிமையாளர் கொண்டு வந்து நிறுத்திய பின்னர் அவர்கள் வெளியே இருக்கும் மீன் கடையில் வாங்குகிறீர்களா அல்லது சந்தைக்கு உள்ளே செல்கிறார்களா என்பதை பொறுமையாக நோட்டம் பார்த்து, உள்ளே சென்றதும் திரும்பி வருவதற்கு சிறிது நேரம் ஆகும் என்பதால் அவர்களது இருசக்கர வாகனங்களை கள்ளச்சாவியை கொண்டு திருடியதும் தெரிய வந்தது.

மேலும் திருடிய இருசக்கர வாகனத்தை விற்பனை செய்வதற்காக அப்படியே கொண்டு சென்றால் திருட்டு வாகனம் என போலீசார் பிடித்துவிடுவார்கள் என்பதால் அக்குவேர் ஆணிவேராக கழற்றி பாகங்களை தனித்தனியே பிரித்து விற்று வந்துள்ளார். மேலும் வாகனங்களின் எஞ்சின், சேஸ் பிரேம் ஆகியவற்றில் நம்பர் இருந்ததால் அதனை வாங்குவதற்கு சிலர் தயக்கம் காட்டியதால் அவற்றை மட்டும் வீட்டில் வைத்துள்ளார்.

இருசக்கர வாகனங்களை திருடி வந்த தில்லாலங்கடி திருடன் கைதுகாயலான் கடை, மெக்கானிக்குகள் என திருடப்பட்ட இருசக்கர வாகனங்களின் பாகங்களை விற்று வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து புழல் போலீசார் இருசக்கர வாகன திருடன் முருகனை மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். கூட்டம் அதிகம் சேரும் இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடி அவற்றை அக்குவேர் ஆணிவேராக கழற்றி விற்பனை செய்த தில்லாலங்கடி திருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ