சென்னை மின்ட் தெரு பகுதியில் பட்டபகலில் கத்தியை காட்டி மிரட்டி பையை அறுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சவுகார்பேட்டை மீண்ட் தெரு பகுதியில் சில தினங்களுக்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை, வேறு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த நான்கு நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரது லெதர் பேக்கை அறுத்து சென்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகியது.
இந்த சம்பவம் தொடர்பாக பூக்கடை போலீசார் விசாரணை மேற்கொண்டத்தில் இருசக்கர வாகனங்களில் நம்பர் பிளேட் இல்லாததால் மர்ம நபர்களை தேடுவதில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபரை கண்டறிந்து விசாரணை மேற்கொண்டத்தில் அவர் ஹரி பிரசாத் என்பது சௌகார்பேட்டை கோவிந்தப்பா தெருவில் உள்ள ஒரு நாட்டு மருந்து கடையில் 10 நாட்களுக்கு முன்பாக பணிக்கு சேர்ந்து அங்கு கலெக்ஷன் ஏஜெண்டாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
அறுத்து செல்லப்பட்ட லெதர் பேக்கில் பணம் இல்லை என்பதாலும் பயத்தின் காரணமாகவும் பாதிக்கப்பட்ட ஹரி பிரசாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இருப்பினும், போலீசார் இருசக்கர வாகனங்களில் வந்து கத்தியை காட்டிமிரட்டி லெதர் பேக்கை அறுத்து சென்ற விவகாரம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை தீவிர ஆய்வு செய்தனர்.
வாகனங்களில் நம்பர் பிளேட் இல்லை என்பதால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்கள் எங்கிருந்து கிளம்பினார்களோ? அந்த இடத்தை கண்டறிந்து போலீசார் அங்கு சென்று விசாரணையில் ஈடுபட்டதில், இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது பூக்கடை பகுதியைச் சேர்ந்த நரேஷ், கண்ணன், மகேஷ் உள்ளிட்ட நான்கு நபர்கள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து பூக்கடை பகுதி சேர்ந்த நரேஷ், கண்ணன், மகேஷ் ஆகிய மூவரை இன்று பூக்கடை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட நபர் தலைமறைவாக உள்ளதாகவும், அவர் போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச்சின் பேரில் ஹரி பிரசாதின் பையை மிரட்டி பிடுங்கி சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, கலெக்ஷன் ஏஜண்டான ஹரி பிரசாத், பணத்தை கலெக்ஷன் செய்து வருவதாகவும் அதனை வழிப்பறி செய்தால் லட்சக்கணக்கில் பணம் இருக்கும் என நினைத்து வழிப்பறியில் ஈடுபட்டதும், ஆனால் வழிப்பறியில் ஈடுபட்ட ஹேண்ட் பேக்கில் ஒரு ரூபாய் கூட பணம் இல்லை எனவும் கைது செய்யப்பட்ட நபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.மேலும், போலீசாரிடம் சிக்கக் கூடாது என்பதற்காக வழிப்பறிக்கு முன்பே மாற்று உடைகளை எடுத்து வந்ததும், பின் வழிப்பறி செய்துவிட்டு சிறிது தூரம் சென்றதும் மாற்று உடைகளை அணிந்து தலைமறைவானதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக கைது செய்யப்பட்ட நரேஷ் LLB படித்து வருவது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த சம்பவத்தின் முக்கிய நபர் தலைமறைவாக இருப்பதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.மேலும் மூன்று நபர்களை கைது செய்யும்போது கீழே விழுந்ததில் இரண்டு நபர்களுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள முக்கிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.