Homeசெய்திகள்க்ரைம்நெல்லையில் இரட்டை கொலை - மாமனார் மாமியாரை வெட்டிய மருமகன் கைது!

நெல்லையில் இரட்டை கொலை – மாமனார் மாமியாரை வெட்டிய மருமகன் கைது!

-

- Advertisement -

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த கிருஷ்ணாபுரம் அருகே ஆரோக்கியநாதபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் பாஸ்கர்(வயது 55). இவரது மனைவி செல்வராணி(53). பாஸ்கர் கூலி வேலை செய்து வருகிறார்.

இவர்களுக்கு ஜெனிபர்(30) உள்பட 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், இளைய மகளான ஜெனிபர் அதே தெருவை சேர்ந்த கூலி தொழிலாளியான மரியகுமார்(36) என்பவரை காதலித்து வந்தார். பின்னர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, தான் காதலித்த மரியகுமாரையே ஜெனிபர் திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் செல்வகுமார் சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். இதனை ஜெனிபர் பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை.

மேலும் செல்வகுமார் தினமும் மதுபோதையில் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரது தொந்தரவுகள் அதிகரித்த காரணத்தினால், ஜெனிபர் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன்பின்னரும் சில நாட்களாக மது குடித்துவிட்டு வந்து செல்வகுமார் தனது மாமியார் வீட்டிற்கு சென்று தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக ஜெனிபரை அவரது பெற்றோர் வீட்டில் காணவில்லை. அவரது குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளது. இதனை கேள்விப்பட்ட செல்வகுமார், ஜெனிபரின் நடத்தையில் சந்தேகம் அடைந்துள்ளார். அவர் சமீப காலமாக வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் மாயமானதால், செல்வகுமாருக்கு அவரது நடத்தையில் சந்தேகம் வலுத்துள்ளது.

உடனே நேற்று இரவில் நன்றாக மது குடித்துவிட்டு அரிவாளுடன் தனது மாமனார் பாஸ்கர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவரது குழந்தைகள் 2 பேரும் தூங்கி கொண்டிருந்த நிலையில், பாஸ்கரும், செல்வராணியும் வீட்டின் முற்றத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஆத்திரத்துடனும், மதுபோதையிலும் சென்ற மரிய குமார், தனது மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி சத்தம் போட்டுள்ளார். மேலும் அவதூறாகவும் பேசியுள்ளார். இதனை பாஸ்கர் கண்டித்த நிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரத்தில் இருந்த செல்வகுமார், அரிவாளால் பாஸ்கரை சரமாரி வெட்டினார்.

நெல்லையில் இரட்டை கொலை - மாமனார் மாமியாரை வெட்டிய மருமகன் கைது!
அதனை தடுக்க வந்த செல்வராணியையும் அரிவாளால் சரமாரி வெட்டினார். இதில் மாமனார், மாமியார் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதனிடையே அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதனை பார்த்து செல்வகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே அப்பகுதியினர் பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பாஸ்கர் மற்றும் செல்வராணி ஆகியோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நெல்லையில் இரட்டை கொலை - மாமனார் மாமியாரை வெட்டிய மருமகன் கைது!இதுதொடர்பாக கொலையுண்ட பாஸ்கரின் சகோதரர் மகன் மரியசூசை அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஹரிகரன் வழக்குப்பதிவு செய்தார். பின்னர் கொலையாளியான செல்வகுமாரை தேடிய நிலையில், அந்த ஊருக்கு சற்று தொலைவில் புதர் பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்து பெருமாள்புரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவர் மதுபோதையில் இருந்ததால் உடனடியாக கொலைக்கான காரணம் தெரியவில்லை. இன்று காலை போதை தெளிந்த பின்னர் அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் தனது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு வந்ததாகவும், இந்நிலையில் 4 நாட்களாக ஜெனிபர் வீட்டில் இல்லாததால் சந்தேகம் அதிகரிக்கவே, ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் இன்று காலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

MUST READ