ரூ 50 லட்சம் வரை நகை, பணம், கார் போன்ற சீர் வரிசைகளை மனைவி வீட்டில் இருந்து பெற்ற பிறகும் மீண்டும் ஆடம்பர கார், லட்சக்கணக்கில் பணம் கேட்டு மாமியார் வீட்டில் புதிதாக திருமணமாகி வந்த மருமகளை சித்ரவதைக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த இந்த கொடுமையின் உச்சம் யாருமே நினைத்த கூட பார்க்க முடியாத அளவுக்கு எய்ட்ஸ் நோய் தொற்றை உருவாக்கக்கூடிய எச்ஐவி கிருமிகளை ஊசி மூலம் அந்த பெண்ணின் உடலில் செலுத்தி உள்ளனர்.இப்போது எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டு அந்த பெண் அவதிப்பட்டு வருகிறார்.உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவார் அருகே பிரன் காலியர் காவல் நிலையத்துக்குட்பட்டது ஜஸ்ஸா வாலா கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அபிஷேக். இவருக்கு சோனல் சைனி என்ற இளம் பெண்ணுடன் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது, காஸ்ட்லியான கார், நகைகளை பெற்றோர் வீட்டில் வரதட்சனையாக கொடுத்துள்ளனர். தன்னுடைய மாமியார் வீட்டில், தங்கள் ஆசை மகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காகவே, லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளையும், பணத்தையும் கணவன் வீட்டாருக்கு வரதட்சணையாக கொடுத்து இருக்கிறார்கள். கிட்டத்தட்ட கல்யாணத்துக்கு ரூ. 50 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள்.
மறுபடியும் ரூ.25 லட்சம் ரொக்கமும், இன்னொரு பெரிய ஸ்கார்பியோ எஸ்யூவி காரும் வரதட்சணையாக வேண்டும் என்று மருமகளை தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளார் மாமியார். அதைத் தொடர்ந்து மருமகளை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர். இந்த விவகாரம் ஊர்பஞ்சாயத்து வரை போனது. இறுதியில் பஞ்சாயத்தில் சுமூகமாக பேசி மீண்டும் மருமகளை மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனாலும் மாமியார் தொல்லை முடிந்ததாக இல்லை. மருமகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்த் தொடங்கி இருக்கிறார். உச்சக்கட்டமாக மருமகளுக்கு எச்ஐவி தொற்று சிரின்ஜியை பயன்படுத்தி, ஊசி போட்டு, நோய் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனால், மருமகளுக்கு உடல்நிலை வேகமாக மோசமடைய துவங்கியது.
நாளுக்கு நாள் உடம்பு மோசமாகவே, மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்தபோதுதான், அந்த பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை, காவல் நிலையத்தில் சென்று புகார் கொத்துள்ளார்.
ஆனால், அவரது புகாரை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது தந்தையும், சஹாரன்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். பெண்ணின் மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரின் மாமியார், கணவர் உள்ளிட்ட உறவினர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரப்பிரதேச காவல்துறைக்கு அதிரடியாக உத்தரவிட்டது.
இதனையடுத்து காங்கோ காவல் நிலையத்தில், பெண்ணின் கணவர், 2 மைத்துனர்கள் மற்றும் மாமியார் ஆகியோர் மீது ஐபிசி பிரிவுகள் 307 (கொலை முயற்சி), 498ஏ (கணவர் அல்லது அவரது உறவினர்களால் ஒரு பெண்ணை கொடுமைப்படுத்துதல்), 328 (விஷம் மூலம் காயப்படுத்துதல்) மற்றும் தொடர்புடைய வரதட்சணை பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது போன்ற சில முக்கிய வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் நிலையத்தில் அவ்வளவு எளிதாக நீதி கிடைப்பதில்லை. புகாரை கூட வாங்கி பதிவு செய்யாத காரணங்களால் தான் இது போல் பலர் நீதிமன்றங்களை நாடி சென்று உத்தரவு பெற வேண்டியது உள்ளது. இது மாமியார் கொடுமைய விட மிக மோசமான கொடுமை.