தூத்துக்குடியில் இனிகோ நகர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐஸ் கிரிஸ்டல் மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் பறிமுதல் தனிப்படை காவல்துறையினர் விசாரணை.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 49க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து சோதனை செய்ய காவல்துறைக்கு தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தனிப்படை போலீசார் போதை பொருட்கள் நடமாட்டம் மற்றும் கள்ளச்சாராயம் நடமாட்டம் உள்ளதா என பல்வேறு பகுதிகளில் மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
இதில் தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தனிப்படை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து இனிகோ நகர் பகுதியில் காவல்துறையினர் சோதனை செய்ததில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இனிகோ நகரை சேர்ந்த நிர்மல் ராஜ் மற்றும் அவரது மனைவி சிவானி ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.
இதில் அவர்களிடம் இருந்து சுமார் எட்டு கிலோ எடை கொண்ட ஐஸ் கிரிஸ்டல் மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இந்திய மதிப்பில் ரூபாய் 8 கோடி அளவுக்கு கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படும் இந்த போதைப்பொருள் சர்வதேச மதிப்பு 24 கோடி ரூபாயாகும்.
இதைத் தொடர்ந்து போதை பொருளை பதிக்கி வைத்திருந்தது தொடர்பாக நிர்மல்ராஜ் மற்றும் அவரது மனைவி ஷிவானி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் சுமார் 24 கோடி ரூபாய் மதிப்பிலான ஐஸ் கிரிஸ்டல் மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.