சென்னை கொரட்டூரில் 7 மாதங்களுக்கு முன்பு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் போலீசார் கள்ளக்காதலனை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கணவனையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை கொரட்டூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக் (29), ஐஸ்வர்யா (27) தம்பதியர். கடந்த 2019ம் ஆண்டு காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணமான ஒரு சில வருடங்களில் இருவருக்குமிடையே அவ்வப்போது மனக்கசப்பு ஏற்பட்டு வந்த நிலையில், ஐஸ்வர்யாவின் தந்தை உன்னி கிருஷ்ணன் இருவரையும் சமாதானம் செய்து வைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா அடையாறு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தை பூர்விகமாக கொண்டு சென்னை மண்ணடி பகுதியில் தங்கி அதே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த முகமது மர்சூக் (31) என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.
இச்சூழலில் கணவனுடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் ஐஸ்வர்யா, முகமது மர்சூகிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு முகமது மர்சூக் மறுப்பு தெரிவித்ததையடுத்து மன உளைச்சலில் இருந்த ஐஸ்வர்யா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமான 5 ஆண்டுகளில் ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டதால், இந்த வழக்கு ஆர்.டி.ஓ விசாரணைக்கு மாற்றப்பட்டு, அம்பத்தூர் சரக உதவி ஆணையர் கிரி மற்றும் ஆர்.டி.ஓ தலைமையில் தீவிரமாக விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் ஐஸ்வர்யாவின் கள்ளக்காதலன் முகமது மர்சூக்கை கொரட்டூர் போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் தலைமறைவாக உள்ள ஐஸ்வர்யாவின் கணவர் கார்த்திக்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.