Homeசெய்திகள்க்ரைம்போலி பெயரில் சிம்கார்டு; சென்னையில் முகாமிட்டுள்ள சைபர் கிரைம் கும்பல்- திகில் பின்னணி

போலி பெயரில் சிம்கார்டு; சென்னையில் முகாமிட்டுள்ள சைபர் கிரைம் கும்பல்- திகில் பின்னணி

-

- Advertisement -

சென்னையில் முகாமிட்டு போலி பெயரில் சிம்கார்டு வாங்கி சைபர் க்ரைம் மோசடி ஈடுபட்ட கும்பல்களை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

சைபர் கிரைம் மோசடி கும்பலுக்கு முக்கியமாக தேவைப்படுவது சிம்கார்டு மற்றும் வங்கி கணக்குகள், இவற்றை செயல்படுத்துவதற்கான கணிணி உள்ளிட்ட தொழில் நுட்பக் கருவிகள். இதை பயன்படுத்தி ஒரு இடத்தில் இருந்து உலகின் எந்த நாட்டிலும் சைபர் க்ரைம் மோசடியை அரங்கேற்றலாம். அந்த வகையில் ஆன்லைன் சைபர் கிரைம் மோசடிகளை வெளிநாடுகளில் இருந்து செயல்பட்டு இந்தியர்களிடம் பணத்தை பறிக்கும் கும்பல் தற்போது சென்னையில் தங்கி செயல்பட  திட்டமிட்டுள்ளதை சென்னை போலீசார் கண்டுப்பிடித்துள்ளனர்.

இந்த சர்வதேச சைபர் க்ரைம் மோசடி கும்பல் மலேசிய நாட்டில் இருந்து வந்து சென்னையில் முகாமிட்டு செயல்பட ஆரம்பித்துள்ளது.  வடமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தான் சைபர் க்ரைம் மோசடி கும்பல் செயல்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் நினைத்திருந்த நிலையில் சென்னையில் டூரிஸ்ட் விசாவில் கும்பல்கள் களம் இறங்கியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் இரண்டு வழக்குகளை பதிவு செய்து மலேசிய சைபர் க்ரைம் மோசடி கும்பல்கள் குறித்து விசாரணையை துவக்கியுள்ளனர்

அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்வதற்கு விமான நிலையம் வந்த மலேசிய நாட்டைச் சேர்ந்த Lee Tick Yien என்ற நபரை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தபோது எவ்வித ஆவணங்களும் இல்லாமல்  22 சிம் காடுகள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் பல ஆன்லைன் சைபர் கிரைம் மோசடிகளுக்கு பயன்படுத்துவதற்காக,
சென்னையில் இருந்து சிம்கார்டு வாங்கி செல்வது தெரியவந்தது. இதையடுத்து குடியுரிமை அதிகாரி சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கைதான மலேசியா நாட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையில் சிம் கார்டுகளை பெறுவதற்கு தரகர்கள் சேர்த்து, அவர்கள் மூலமாக சிம் கார்டுகளை போலி பெயரில் வாங்கி கம்போடியா, மலேசியா, தாய்லாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து நடக்கும் ஆன்லைன் மோசடி குற்றவாளிகளுக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

தொடர்விசாரணையில் பலமுறை ஏஜெண்டுகள் மூலமாக 2000க்கும் அதிகமான சிம்கார்டுகளை சென்னையில் இருந்து வாங்கி ஆன்லைன் மோசடி குற்றவாளிகளுக்கு விற்பனை செய்திருப்பதை கண்டுபிடித்தனர் .

இதனையடுத்து கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் மலேசியாவைச் சேர்ந்த கணேசன், மலேசியாவைச் சேர்ந்த Tan Ching Kun, மலேசியாவைச் சேர்ந்த மகேந்திரன், குன்னூர் பகுதியைச் சேர்ந்த முகமது மானசீர், சேலம் பகுதியைச் சேர்ந்த ராம் ஜெய், மதுரை பகுதியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ் பிந்தர் சிங் ஆகிய ஏழு நபர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 2 மலேசிய நாட்டவர்கள் மற்றும் தரகர்கள் உட்பட 8 பேரிடம் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து 550 சிம்கார்டுகள், இரண்டு லேப்டாப்புகள், 33 வங்கி கணக்குகள், 20 ஏடிஎம் கார்டுகள், 23 மொபைல் போன்கள், ஒரு பிஎம்டபிள்யூ கார், 5485 மலேசியன் பணம், 95 சிங்கப்பூர் டாலர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மத்திய குற்ற பிரிவில் இருந்த இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு மலேசிய கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியா செல்ல இருந்த விமானம் பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மலேசிய நாட்டு பிரஜை சேர்ந்த சாம் மேன் தாங்(35), லியாங் சாங்(32) ஆகியோரின் பாஸ்போர்ட்டுகளை ஆய்வு செய்தனர்.

இவர்களை விசாரணை மேற்கொண்டதில் அடிக்கடி வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேகம் அடைந்த குடியுரிமை அதிகாரிகள் விசாரித்த போது இந்தியாவிலிருந்து சிம் கார்டுகளை வாங்கி சென்று மோசடியில் ஈடுப்படும் கும்பலை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அப்போது 2 பேரிடம் இந்தியா சிம் கார்டுகள் சில இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை விசாரணைக்காக சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த விவகாரம் குறித்தும் சிபிசிஐடி அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஜூன் மாதமே கைது செய்யப்பட்ட இரண்டு மலேசிய நாட்டவர்களும் தமிழ்நாட்டில் டூரிஸ்ட் விசாவில் வந்தது தெரியவந்துள்ளது. இரண்டு மலேசிய நாட்டவர்களும் தனித்தனியாக சென்னையிலும் கோயம்புத்தூரிலும் விமானம் மூலம் வந்துள்ளனர்.

சைபர் கிரைம் மோசடிக்கு தேவைப்படும் சிம் கார்டுகள், சிம் பாக்ஸ் தொழில்நுட்ப கருவிகள் ஆகியவற்றை வைத்து மும்பையில் இருந்து சைபர் கிரைம் மோசடியை இந்தியாவில் அரங்கேற்ற திட்டமிட்டது தெரியவந்துள்ளது. ஆனால் மும்பையில் இடத்தை வாடகைக்கு எடுத்து நடத்துவதற்கு அதிக செலவு ஆன காரணத்தினால் மலேசியா சைபர் கிரைம் மோசடி கும்பல் சென்னையை தேர்ந்தெடுத்துள்ளனர். அந்த வகையில் சென்னை சோழிங்கநல்லூரில் பிரபல அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு எடுத்து சைபர் கிரைம் மோசடிக்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப கருவிகளையும் வைத்து செயல்பட ஆரம்பித்தது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இரண்டு மலேசிய சைபர் கிரைம் மோசடி கும்பல்களும் தொடர்பு குறித்தும், வேறு எங்கெல்லாம் முகாமிட்டு சைபர் க்ரைம் மோசடிகளை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளார்கள் என விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் தொடர்புள்ள நபர்கள் யார் யார் என்பது குறித்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

MUST READ