பிரபல கஞ்சா வியாபாரி ஆந்திராவில் கைது
கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல கஞ்சா வியாபாரியை ஆந்திர மாநிலத்தில் வைத்து அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மீது 3 கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா கடத்தல் உட்பட சுமார் 39க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது.
அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் கடந்த, ஏப்ரல் மாதம் கஞ்சா வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அப்போது முக்கிய குற்றவாளி போலீஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்துள்ளார். ஆவடி காவல் ஆணையரக இணை ஆணையர் விஜயகுமார் IPS அவர்களின் உத்தரவின் பேரில் அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் தனம்மாள் தலைமையான உதவி ஆய்வாளர் போலீசார் 2 பேர், கஞ்சா வழக்குகளில் தலைமறைவாக இருந்த கண்ணன் என்கிற மாயக்கண்ணனை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து ஆந்திர மாநிலம் விரைந்தனர்.

அங்கு விசாகப்பட்டினம் சோடபுரம் ரோடு அருகே உள்ள ஒரு ஹோட்டலில் மாயக்கண்ணன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த ஹோட்டலை சுற்றி வளைத்த போலீசார் மாயக்கண்ணனை மடக்கி பிடித்து கைது செய்து, சென்னை அம்பத்தூரில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் சென்னையில் A+ வகை ரவுடியாக வளம் வந்த இவன் மீது 3 கொலை, கொலை முயற்சி, கஞ்சா கடத்தல் ,வழிப்பறி உட்பட 39 க்கும் மேற்பட்ட வழக்குகளில் ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியும் புளியந்தோப்பு உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் மாயகண்ணனின் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தனிப்படை போலீசார் ஆந்திராவில் கைது செய்து அம்பத்தூர் அழைத்து வந்து எந்தெந்த வழக்குகளை தொடர்பில் உள்ளார் என்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் குற்றவாளி மாயக்கண்ணனை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் கஞ்சா கும்பல்கள் மற்றும் கடத்தல்கள் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும் என அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தெரிவித்தனர்.