புளியந்தோப்பில் ரவுடி மனோ மனைவி கண் முன்னே வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் எம்.எஸ். முத்து நகரை சேர்ந்தவர் ஆகாஷ்(20). இவர் திருப்பதியில் LLB மூன்றாமாண்டு படித்து வருகிறார். நேற்று ஆகாஷ் தனது இருசக்கர வாகனத்தில் தாஸ் நகர் வழியாக சென்ற போது, அப்பகுதியை சேர்ந்த அஜித் சசிக்குமார் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் இருசக்கர வாகனத்தை வழிமறித்து, பைக்கில் மதுபானம் பாட்டில் உள்ளதா என சோதனை மேற்கொண்டு, பின்னர் இந்த பக்கம் வரக்கூடாது என ஆகாஷை மிரட்டி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்கு சென்ற ஆகாஷ் நடந்தது குறித்து தனது சகோதரரான அஜித்திடம் கூறினார்.
இதையத்து சகோதர்கள் ஆகாஷ், அஜித் இருவரும் வந்து மிரட்டிய நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் அஜித் காயமடைந்தார். இதைப் பார்த்த அஜித்தின் உறவினரான ரவுடி மனோ, அவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் சிலர் சேர்ந்து அந்த கும்பலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென ரவுடி அஜித் சசிகுமார் தான் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மனோவை சரமாரியாக வெட்டினார். இதைகண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சுப்புலட்சுமி அஜித் சசிக்குமாரின் காலில் விழுந்து, வெட்ட வேண்டாம் என கண்ணீர் விட்டு கெஞ்சினார். ஆனால் அவரது தலையிலும் வெட்டிவிட்டு, பின்னர் மனோவை கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த மனோவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த சுப்புலட்சுமி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மனோ மீது கொலை, கொலை முயற்சி உட்பட 40 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், மனோவுக்கும், அஜித் சசிக்குமார் கும்பலுக்கும் ஏற்கனவே முன்பகை இருந்ததும் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக அஜித், வெற்றி ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள சரித்திர பதிவேடு ரவுடியான அஜித் சிக்குமார் திருநாவுக்கரசு, அப்பு, தில்லன்ராஜ், அருண் உட்பட பல பேரை தேடி வருகின்றனர்.