Homeசெய்திகள்க்ரைம்ஏழு ஆண்களை ஏமாற்றிய பெண்ணின் பெற்றோரை கடத்திச் சென்ற முதல் கணவன் கைது

ஏழு ஆண்களை ஏமாற்றிய பெண்ணின் பெற்றோரை கடத்திச் சென்ற முதல் கணவன் கைது

-

- Advertisement -

ஏழு ஆண்களை  ஏமாற்றி இருபது லட்ச ரூபாய் பறித்த ஏற்காட்டை சேர்ந்த   பெண்ணின்  பெற்றோரை கடத்திச் சென்ற முதல் கணவன் உள்பட இரண்டு பேர் கைது ஐந்து பேரை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்……

ஏழு ஆண்களை ஏமாற்றிய பெண்ணின் பெற்றோரை கடத்திச் சென்ற முதல் கணவன் கைது

சேலம் மாவட்டம் ,  ஏற்காடு  முருகன் நகரை சேர்ந்தவர் சாமுவேல்.  இவரது மனைவி மனோரஞ்சிதம். இவர்களுக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்த மகள் பிரவீனா(37) ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார்.  இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டியை  சேர்ந்த நிர்மல் குமார் என்பவருடன் திருமணம் ஆனது.  எட்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் நிர்மல்குமாரை பிரிந்து  பிரவீனா தனியாக வந்துவிட்டார்.

தற்போது ஹைதராபாத்தில் பிரவீனா தங்கி இருந்து வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு 9 மணி அளவில் சாமுவேலின் வீட்டிற்கு வந்த ஏழு பேர் கொண்ட கும்பல், பிரவீனாவின் பெற்றோரான தந்தை  சாமுவேல்(69) , தாய் மனோரஞ்சிதம் ஆகிய இருவரையும் காரில் கடத்திச் சென்றுள்ளனர்.  இதனை அக்கம் பக்கத்தினர் அறிந்து,  ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.  இதன் அடிப்படையில் ஏற்காடு காவல் ஆய்வாளர் பொறுப்பு பாலாஜிரமணன் மற்றும்  போலீசார் வயதான தம்பதியை காரில் கடத்திய கும்பல் பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் பிரவீனாவின் முதல் கணவரான நிர்மல்குமார் உள்ளிட்ட ஏழு பேர் இந்த கடத்தலில் ஈடுபட்டிருப்பதை கண்டறிந்து , அவர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் ,  நேற்று மதியம் ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் மைக்கேல் அந்தோணி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது,  சந்தேகப்படும்படி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் கடத்தப்பட்ட சாமுவேல் மற்றும் மனோரஞ்சிதம்  இருந்தனர். மேலும்  காரில்  அவர்களை  கடத்திய  நிர்மல்குமார் மற்றும் சேலம் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த முருகானந்தம் இருந்தனர்.

உடனே ரெண்டு பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து,  வயதான தம்பதியை மீட்டனர். கைது செய்யப்பட்ட நிர்மல்குமார் மற்றும் முருகானந்தம் ஆகிய இருவரிடமும் தீவிர விசாரணை நடத்திய போது,  பிரவீனா கடந்த 10 ஆண்டுக்கு முன்பு  நிர்மலுக்குமாரை திருமணம் செய்துள்ளார். மகன் பிறந்த நிலையில் அவரை விட்டு பிரிந்து வந்துள்ளார் . அதன் பிறகு வேறு வேறு ஆண் நபர்களுடன் பழகியுள்ளார் .

தான் பழகிய ஆண் நண்பர்களிடம் இருந்து பங்கு சந்தையில் முதலீடு செய்து,  அதிகம் லாபம் ஈட்டி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை வாங்கியுள்ளார்.  பின்னர் அவர்களிடம் பங்கு சந்தை முதலீட்டில் பணத்தை இழந்து விட்டேன் எனக்கூறி அந்த நபர்களிடமிருந்து விலகுவார்.  இப்படி அவர் ஏழு பேரிடம் ₹20 லட்சம் அளவிற்கு பணத்தை வாங்கியுள்ளார். அந்த பணத்தை ஏழு பேரும் திரும்ப கேட்டு வந்துள்ளனர். ஆனால் பணத்தை ஏமாற்றிய  பிரவீனா ஹைதராபாத் சென்று வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே வசித்துள்ளார்.

20 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த முதல் கணவர்  நிர்மல்குமார் உள்ளிட்ட ஏழு பேரும் ஏற்காட்டில் உள்ள பிரவீனாவின் வீட்டிற்கு வந்து அவரது பெற்றோரை சேலத்திற்கு காரில் கடத்திச் சென்று பணத்தை திரும்ப கேட்டு மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக போலீசார் தேடி வருவதை அறிந்து  மீண்டும் அவரை வீட்டிற்கு கொண்டு வந்து விடுவதற்காக வந்தபோது போலீசில் சிக்கிக் கொண்டனர் என விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து கைதான  நிர்மல்குமார்,  முருகானந்தம் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  மேலும் இக்கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள  ஐந்து பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர் . மேலும் இது தொடர்பாக ஏழு ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த ஏற்காட்டைச் சேர்ந்த  பிரவீனா- விடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

டாஸ்மார்க் ஊழியர்களை தாக்கிய ரவுடிகளின் வெறிச்செயல் – இருவர் படுகாயம்

MUST READ