விதவைப் பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க இடையூறாக இருந்த சொந்த தாய் தந்தையை விஷம் வைத்து மகனே கொலை செய்துள்ள சம்பவம் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
ஹாசன் மாவட்டம், அரக்கலகோடு தாலுகா பிசிலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான நஞ்சுண்டப்பா மற்றும் அவரது மனைவி உமா கடந்த 23ம் தேதி வீட்டில் வாயில் நுறைத் தள்ளிய நிலையில் சடலமாக கிடந்தனர். குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டதாக இந்த தம்பதியின் இரண்டாவது மகன் மஞ்சுநாத் கிரமாத்தினரிடம் கூறியதுடன், பெற்றோரின் சடலத்தை அவசர அவசரமாக அடக்கம் செய்துள்ளார்.
இதனிடையே இந்த தகவல் போலீசாருக்கு கிடைக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நஞ்சுண்டப்பா மற்றும் உமா ஆகியோரின் சடலத்தை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மஞ்சுநாத் நடவடிக்கைகளை பார்த்த போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதை தொடர்ந்து மஞ்சுநாத்தை போலீஸ் பாணியில் விசாரித்த போது நஞ்சுண்டப்பா மற்றும் உமாவை கொலை செய்தது மஞ்சுநாத் என தெரிய வந்தது . இதற்கு காரணம் மஞ்சுநாத்திற்கு அதே பகுதியை சேர்ந்த விதவைப்பென் ஒருவருடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது. விவசாயத்தில் இருந்த வந்த வருவாயை பெற்றோருக்கு தெரியாமல் மஞ்சுநாத் அந்த பெண்ணிற்கு செலவழித்து வந்துள்ளார். மேலும் வீட்டிலிருந்த சில நகைகள் மற்றும் பணத்தையும் பெற்றோருக்கு தெரியாமல் அந்த பெண்ணுக்கு கொடுத்துள்ளார். இந்த விஷயம் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மஞ்சுநாத்- ஐ கண்டித்ததுடன், வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற நகை மற்றும் பணத்தை அந்த பெண்ணிடம் இருந்து மீண்டும் வாங்கி வருமாறு கூறியுள்ளனர். ஆனால் அந்த பெண்ணிடம் சென்று நகை மற்றும் பணத்தை திரும்பப் பெற்றால் தொடர்ந்து உல்லாசம் அனுபவிக்க முடியாது.
எனவே பெற்றோர் என்றும் பாராமல் தந்தை நஞ்சுண்டப்பா மற்றும் தாய் உமாவை கொல்ல திட்டமிட்டு, விவசாயத்திற்காக வாங்கி வந்த பூச்சிக்கொல்லி மருந்தை உணவில் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக பூச்சிக்கொல்லி மருந்தை ஆடைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு பெற்றோரின் கண் எதிரிலேயே உணவை சாப்பிட்டு அவர்களை நம்ப வைத்து பின்னர் அவர்களுக்கு தெரியாமல் உணவில் விஷம் கலந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மஞ்சுநாத்தை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.