கோவில்பட்டியில் பைக் திருடனுடன் அதிமுக முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கைது
திருட்டு பைக்குகளை வாங்கிய அதிமுக முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கனிராஜ் (48). இவர் அரசு பஸ் கண்டக்டராக உள்ளார். இவர் கடந்த மே 28ம்தேதி தனது வீட்டு முன் பைக்கை நிறுத்தியிருந்தார். மறுநாள் பார்த்த போது பைக்கை காணவில்லை. இது குறித்து கனிராஜ் கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பெயரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த சக்திகணேஷ் (22) என்பவர் பைக்கை திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த சக்தி கணேஷ்சை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை சக்திகணேஷ் கூறினார்
சக்திகணேஷ் ஏற்கனவே மதுரை பகுதியில் இரண்டு பைக்கை திருடி வைத்திருந்த நிலையில் கோவில்பட்டியில் திருடிய பைக்கையும் சேர்த்து மூன்று பைக்குகளையும் ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரத்தைச் சேர்ந்த ராஜா (46) என்பவரிடம் விற்றுள்ளார். ராஜா மம்சாபுரம் அதிமுக முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவராகவும் இருந்துள்ளார்.
தற்போது அங்குள்ள பேரூராட்சியின் 2வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்து வருகிறார். இவரிடம் திருட்டுப் பைக்குகளை விற்றுள்ளது விசாரணையில் சக்தி கணேஷ் கூறியதை தொடர்ந்து ராஜாவையும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். விசாரணையில் திருட்டுப் பைக்குகளை ராஜா வாங்கியது தெரிய வந்தது தொடர்ந்து இருவரையும் கைது செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.

மேலும் பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சக்தி கணேஷ் மீது மதுரை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. திருட்டுப் பைக்கை வாங்கிய அதிமுக முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது மேலும் இவர் வேறு யாரிடமாவது திருட்டு வாகனங்களை வாங்கியுள்ளாரா என்பது விசாரணை செய்தால் தான் தெரிய வரும்.
திருட்டு சம்பவங்களை ஈடுபடும் சக்தி கணேஷ் திருடுவதற்கு முன்னர் அந்த ஊருக்கு சென்று எங்கெங்கெல்லாம் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் பைக்குகள் தெருவோரங்களிலும் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை நோட்டமிட்டு பின்னர் பைக் திருடுவதை கைவந்த கலையாக செய்து வந்துள்ளார்.