உதகை அருகே 50 சவரன் நகை கொள்ளை அடித்த சம்பவத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தந்தை, தாய் இரண்டு மகன்கள் உள்ளிட்ட நான்கு பேர் தனிபடை போலிசார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கபட்ட விவசாயி உதகை அருகே புதுமந்து பகுதியில் உள்ள கவுட சோலை பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(50). இவர் தனது மனைவி தனலட்சுமியுடன் வசித்து வருகிறார். இவர் 3 ஏக்கரில் விவசாயம் செய்து வரும் நிலையில் கடந்த 19-ந்தேதி காலை உதகையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு தனது மனைவியுடன் சென்று விட்டு மதியம் இரண்டு மணி அளவில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். வீட்டின் முன்பக்க கதவை திறந்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை அடித்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
சுமார் 50 சவரன் நகை கொள்ளை போன நிலையில் சம்பவம் குறித்து பழனிச்சாமி உடனடியாக புதுமந்து காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் உதவியுடன் வந்த புதுமந்து காவல்துறையினர் நகை கொள்ளையடிக்கப்பட்ட வீட்டிற்குள்ளும் சுற்றுவட்டார பகுதிகளிலும் தேடினர்.
மேலும் கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உத்தரவுப்படி உதகை டிஎஸ்பி நவீன் குமார் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணி முடக்கி விடபட்டது.
விசாரணையில் பழனிச்சாமியின் தோட்டத்தில் சுமார் 15 நாட்கள் பணியாற்றிவிட்டு கொள்ளை சம்பவத்திற்கு முன் தினம் குடும்பத்துடன் வீட்டை காலி செய்துவிட்டு சென்ற சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரசிங் கார்டுவின் மூத்த மகன் 19-ந்தேதி மதியம் அப்பகுதிக்கு வந்து சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து ஈஸ்வரசிங் கார்டு(43), அவரது மனைவி ஆனிதா பாய் (38), இளைய மகன் அங்கித் சிங் போர்த்தி(18) மூத்த மகன் அபய் போர்த்தி (19) ஆகியோர் ஈடுபட்டதை உறுதி செய்த தனிபடை போலிசார் அவர்களது செல்போன் சிக்னல்கள், மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பின்தொடர்ந்து சென்றனர்.
ஒரு கட்டத்தில் அவர்கள் சொந்த ஊருக்கு ரயிலில் தப்பி செல்வதை அறிந்த போலிசார் நாக்பூர் சென்று ஈஸ்வரசிங் கார்டு(43), அவரது மனைவி ஆனிதா பாய் (38), இளைய மகன் அங்கித் சிங் போர்த்தி(18) மூத்த மகன் அபய் போர்த்தி (19) மடக்கி பிடித்தனர். அவர்கள் 4 பேரையும் கைது செய்து உதகை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்கள் கொள்ளையடித்து சென்ற 50 சவரன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.
உதகை போலீசார் துரிதமாக செயல்பட்டு வட மாநிலத்திற்கு தப்பிச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கொள்ளையர்களை கைது செய்து கொள்ளை போன நகைகளை மீட்டுள்ளதற்கு பாதிக்கப்பட்ட விவசாயி பழனிச்சாமியும் அப்பகுதி மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதனிடையே கைது செய்யப்பட்ட நான்கு பேரும் விரைவில் உதகையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சக்கணக்கில் பணமிருக்கும் என்று வழிப்பறியில் ஈடுப்பட்ட மாணவர்களுக்கு ஏமாற்றம். 3 பேர் கைது