மது வாங்கி கொடுத்து வெட்டி கொலை செய்து கை, கால்களை கட்டி கிணற்றில் வீசிய 5 பேர் சிறையில் அடைப்பு.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் அஜீத் (23). இவர் கோழி கறி கடையில் கூலி வேலை செய்து வந்தார். அஜீத்திற்கு திருமணமாகாத நிலையில் தமது தாய், தந்தையுடன் வசித்து வந்துள்ளார். அண்மையில் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்ததாகவும், கூறப்படுகிறது. கடந்த திங்களன்று இவர் வீட்டில் இருந்த போது மது குடிப்பதற்காக நண்பர்கள் அழைத்து சென்றனர். அதன் பிறகு வீட்டிற்கு வராததால் இவரது குடும்பத்தினர் இவரை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி இரவு மீஞ்சூர் அருகே ராமரெட்டிபாளையம் பகுதியில் உள்ள முட்புதரில் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை செய்தபோது பாழடைந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதனை தொடர்ந்து கிணற்றில் பார்த்த போது ஆண் சடலம் ஒன்று உள்ளாடை மட்டுமே அணிந்த நிலையில் கை, கால்கள் கட்டப்பட்டு மிதந்து கொண்டிருந்தது. இதனையடுத்து தண்ணீரில் மிதந்த சடலத்தை நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீஞ்சூர் காவல்துறையினர் கைப்பற்றினர்.
தொடர்ந்து காணாமல் போனவர்கள் அளித்த புகார்கள் கொண்டு நடத்திய விசாரணையில் அண்மையில் காணாமல் போன அஜீத் என்பது தெரிய வந்துள்ளது. அஜீத்தின் கை, கால்கள் பேண்ட், சட்டையால் கட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அஜீத்தை வீட்டிற்கு வந்து அழைத்து சென்ற நண்பர்களை பிடித்து வந்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடந்த திங்களன்று மீஞ்சூரில் உள்ள மதுபானக்கடையில் மது அருந்தும் போது அஜீத்தை அவரது நண்பர்கள் கிண்டல் செய்துள்ளனர். அண்மையில் காலில் அடிப்பட்ட நிலையில் அதற்காக அறுவை சிகிச்சை செய்து அஜத் பிளேட் வைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் அஜீத் இயல்பாக நடக்க முடியாமல் ஒரு காலை தாங்கி தாங்கி நடந்ததாகவும், அது தொடர்பாக மது அருந்தும் போது சகநண்பர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
அப்போது அஜீத் கோபமடைந்து தம்மை கிண்டல் செய்த நண்பர்களை தாக்கிய நிலையில் நண்பர்களுக்கும் பதிலுக்கு அஜீத்தை தாக்கியுள்ளனர். இருதரப்பிற்கும் தகராறு ஏற்பட்டு பின்னர் அஜீத் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆத்திரம் தீராத நண்பர்கள் அஜீத்தை தீர்த்து கட்ட திட்டம் தீட்டுகின்றனர். தொடர்ந்து நண்பர்கள் வீட்டிற்கு வந்து அஜீத்தை மது அருந்தலாம் வா என கூறி அழைத்து சென்றுள்ளனர். மீஞ்சூர் அடுத்த ராமரெட்டிபாளையம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத ஏரிக்கரையில் அமர்ந்து அனைவரும் மது அருந்தியுள்ளனர்.
அஜீத்திற்கு மது போதை தலைக்கேறியதும் நண்பர்கள் இணைந்து மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு தலை உடல் என சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அஜீத் அணிந்திருந்த சட்டை, பேண்ட் உள்ளிட்ட ஆடைகளை கழற்றி அஜீத்தின் கை, கால்களை கட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து அருகில் முட்புதரில் பாழடைந்த நிலையில் உள்ள கிணற்றில் கொண்டு வந்து அஜீத்தின் சடலத்தை வீசி சென்றுள்ளனர்.
இதனையடுத்து இந்த கொலை தொடர்பாக இந்திய தண்டனை சட்டத்தில் கொலை, தடயங்களை மறைத்தல், தகாத வார்த்தைகளில் பேசுதல், கூட்டுச்சதி உள்ளிட்ட 8பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நாகராஜ், கணேஷ், மோகன், திருட்டு கார்த்திக், சாய்குமார் ஆகிய 5பேரை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். நண்பர்களுக்குள் மதுஅருந்தும் ஏற்பட்ட தகராறில் சக நண்பனை வெட்டி கொலை செய்து கிணற்றில் வீசிய நண்பர்கள் கம்பி எண்ணும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.