விநாயகர் சதுர்த்திக்கு பணம் கேட்டு உணவகத்தை சூறையாடிய இரண்டு பேரை குண்டாஸில் அடைக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட போயம்பாளையம் பகுதியில் கடந்த 2 தேதி அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட பணம் கேட்டு மிரட்டி கணபதி என்பவருடைய உணவகத்தை ஒரு கும்பல் சூறையாடியது.
அந்த வழக்கில் கார்முகிலன் 30, சதீஷ் 28 என்ற இருவர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட இருவரையும் குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பொது மக்களையும் வணிக நிறுவனங்களையும் மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகர ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஆண்டில் மட்டும் திருப்பூரில் இதுவரை 87 பேர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.