மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.85 லட்சம் ஏமாற்றிய தமிழ்நாடு பாடநூல் கழக ஊழியர் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது.
அமைச்சர் தெரியும் அதிகாரிகள் தெரியும் என கூறி பண மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிப்பு.
சென்னை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்தவர் கௌசல்யா. இவரது கணவர் சுப்ரமணியன் என்பவருக்கும் நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பணிபுரிந்து வரும் கோவிந்தராஜ் என்பவருடன் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் கோவிந்தராஜ் தனக்கு அமைச்சர், மருத்துவ அதிகாரிகள் பலர் பழக்கம் மருத்துவ சீட் தேவை என்றால் கூறவும் என சுப்ரமணியனிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பி சுப்ரமணியன் அவரது நண்பர் சாதிக் மகள் ஆய்ஷாவிற்க்கு மருத்துவ சீட்டு வாங்கி தரும்படி 15 லட்சம் கோவிந்தராஜிடம் கொடுத்துள்ளார். மேலும் இது போன்று சிலரிடம் பணம் பெற்று 85 லட்சம் வரை கோவிந்தராஜ் வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார் சுப்ரமணியன். இந்த நிலையில் கூறியது போன்று கோவிந்தராஜ் மருத்துவ சீட் வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் சாதிக் சுப்ரமணியனிடம் பணத்தை கேட்டு பிரச்சனை செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து சுப்ரமணியன் கோவிந்தராஜிடம் கேட்டதற்கு முறையாக பதில் அளிக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார். இதன் பின்னர் கௌசல்யா ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட வேலைவாய்ப்பு மோசடி பிரிவு ஆய்வாளர் ஆல்பி பிரிஜெட் மேரி வழக்கு பதிவு செய்து வால்பாறையில் பதுங்கி இருந்த தமிழ்நாடு பாடநூல் கழக ஊழியர் கோவிந்தராஜை அதிரடியாக கைது செய்துள்ளனர். பின்னர் அவரை ஆவடி அழைத்து வந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பணம் பறித்த தமிழக அரசு ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.