கர்நாடகாவில் குல்பர்கா, ஈரானிய கொள்ளையர்கள் கைது
கர்நாடகாவில் “குல்பர்கா மற்றும் ஈரானிய கொள்ளையர்கள்” இருவரை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
1100 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ள சுவராசிய தகவல்கள்…
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி மேடவாக்கம் பொன்னியம்மன் கோவில் சந்திப்பில் இரண்டு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்று செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பரங்கிமலை துணை ஆணையர் தீபக் சிவாஜ் தனிப்படையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
செயின் பறிப்பு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 300 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அவ்வாறு ஆய்வு செய்தபோது மேடவாக்கம் சந்திப்பில் ஹோட்டல் ஒன்றில் கொள்ளையர்கள் செல்போனில் பேசிக் கொண்டிருந்த காட்சிகள் பதிவாகி இருந்தது.
தொடர்ந்து செல்போன் சிக்னல்கள் மூலமாகவும் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்ட போது காஞ்சிபுரம் தனியார் ஓட்டல் ஒன்றில் செயின் பறிப்பு சம்பவம் நடந்த நாட்களுக்கு முந்தைய நாளிலிருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை தங்குவதற்கு கொள்ளையர்கள் பணம் செலுத்தி இருந்தது தெரிய வந்துள்ளது. அந்த ஹோட்டலில் தங்கி கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து மேடவாக்கம் சந்திப்பிலும், கொள்ளையர்கள் தங்கி இருந்த காஞ்சிபுரம் தனியார் ஹோட்டலிலும் டவர் டம்ப் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் யார் யாருக்கு பேசியுள்ளார்கள் என்ற செல்போன் எண்களின் பட்டியலை தனிப்படை போலீசார் தயாரித்தனர்.
குறிப்பாக கொள்ளையர்கள் பயன்படுத்திய செல்போன் எண் ஏழு விதமான செல்போன்களில் பயன்படுத்தப்பட்டதும், அதன் ஐ எம் இ ஐ நம்பரையும் தனிப்படை போலீசார் சேகரித்தனர். இதனை அடுத்து தொடர்ந்து அந்த கொள்ளையர்கள் தொடர்பு கொண்ட 19 செல்போன் எண்களின் பெயர் மற்றும் முகவரிகளை போலீசார் சேகரித்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து தனிப்படை போலீசார் 800 க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பெங்களூரு விமான நிலையம் வரை கொள்ளையர்கள் சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து அங்கு இருக்கும் பெங்களூர் போலீசார் உதவியுடன் விசாரணை மேற்கொண்டதில் பெங்களூரு விமான நிலையத்தில் செயின் பறிப்பு கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை விமான நிலையம் அருகே நிறுத்தி வைத்து விட்டு கடந்த மாதம் 16ஆம் தேதி மத்திய பிரதேசத்திற்கு விமானம் மூலம் கொள்ளையர் ஒருவன் சென்றது தெரியவந்தது.
இதே நேரத்தில் மற்றொரு கொள்ளையன் எங்கெங்கு செல்கிறான் என்கிற சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கிருஷ்ணகிரி மாவட்டம் வரை சென்றது தெரிய வந்தது.
கொள்ளையர்கள் பயன்படுத்திய ஐ எம் இ ஐ நம்பர் மூலமாக வேறு புதிய புதிய சிம் கார்டுகளை பயன்படுத்திய போதெல்லாம் காவல்துறையினர் செல்போன் சிக்னல் மூலமாக கொள்ளையர்கள் செல்லும் இடத்தை கண்டுபிடித்துக் கொண்டிருந்தனர்.
இறுதியாக இம்மாதம் ஒன்றாம் தேதி கொள்ளையர்கள் பயன்படுத்திய செல்போனில் ஒன்று மும்பையில் இருந்து ஹைதராபாத்திற்கு பயணித்துக் கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர். ஆனால் திடீரென இரண்டாம் தேதி கொள்ளையர்களின் செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
மறுபடியும் போலீசார் வசம் இருக்கும் ஐ எம் இ ஐ நம்பர் உடைய செல்போன்களில் புதிய சிம் கார்டுகள் போடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து அந்த செல்போன் எண்ணை தொடர்ந்து கண்காணித்த போது, ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு ரயில் மூலமாக அந்த செல்போன் எண் பயணப்பட்டுக் கொண்டிருப்பதை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கண்டுபிடித்தனர்.
இதே நேரத்தில் மற்றொரு கொள்ளையன் பயன்படுத்திய செல்போன் எண் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு பயணித்திருப்பதும் கண்டுபிடித்தனர்.
இந்த இரண்டு கொள்ளையர்களின் செல்போன் நம்பர்களின் கால் அழைப்புகளை ஒரு சேர வைத்து போலீசார் கண்காணிக்கும் போது, பெங்களூரு விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்ளைக்காக பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையே பயன்படுத்தி இரண்டு கொள்ளையர்களும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பது செல்போன் சிக்னல் மூலமாக தனிப்படை போலீசாருக்கு உறுதியானது.
இதனையடுத்து செல்போன் சிக்னல்களை அடிப்படையாக வைத்து தனிப்படை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். குறிப்பாக செல்போன் சிக்னல் கர்நாடகா ராமநகரவில் உள்ள மண்டிபட் குனிக்கல் பிரதான சாலையில் இருப்பதை உறுதி செய்த தனிப்படை போலீசார் இரண்டு கொள்ளையர்களையும் இருசக்கர வாகனத்தோடு சுற்றி வளைத்து பிடித்தனர்.
இப்படிப்பட்ட இரண்டு கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில் இருவரும் ஈரானிய கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது. குல்பர்கா மற்றும் பிடார் ஈரானிய கொள்ளை கும்பலை சேர்ந்த குலாம் அப்பாஸ் மற்றும் சக்லைன் ஆகிய இரண்டு பேரும், கும்பலோடு சேர்ந்து பல கொள்ளை சம்பவங்களை நிகழ்த்தியது தெரியவந்துள்ளது.
குறிப்பாக ஈரானிய கும்பல்கள் இந்தியாவில் வடக்கு தெற்கு சென்று தொடர்ந்து செல்போன் பறிப்பு, பெண்களை மிரட்டி பணம் பறித்தல், தனியாக செல்லும் பெண்களிடமிருந்து செயின் பறித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
குறிப்பாக பிடிபட்ட இந்த இரண்டு கொள்ளையர்களுக்கு தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் வழக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாடு போலீசார் 1100 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து டவர் டம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்போன் சிக்னல்கள் மூலமாக சாதுரியமாக சினிமா பாணியில் இரண்டு ஈரானிய கொள்ளையர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு குல்பர்கா மற்றும் பிடார் இராணிய கொள்ளையரகள் குலாம் அப்பாஸ் மற்றும் சக்லைன் ஆகிய இருவரையும் சென்னை அழைத்து வந்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இரண்டு கொள்ளையர்கள் தொடர்புடைய மற்ற ஈரானிய கொள்ளையர்கள் யார் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜப்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தமிழகத்தில் எவ்வளவு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறித்தும் மற்ற கொள்ளையர்கள் பற்றி தெரிந்து கொள்ளவும் கொள்ளையடித்த பொருட்களை எங்கு மறைத்து வைத்திருக்கிறார்கள் என கண்டறியவும் இரண்டு ஈரானிய கொள்ளையர்களையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.