சிதம்பரம் அருகே உள்ள கீழ்அணுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(35). இவர் வெளிநாட்டில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரோஜா (27). இவர்களுக்கு கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. திருமணம் ஆகி சுமார் 2 மாதங்களே ஆகிறது. திருமணம் ஆனது முதலே கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவும் தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிலம்பரசன் வீட்டில் இருந்த பிளேடை எடுத்து தனது மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்து படுகாயமடைந்த ரோஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிள்ளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ரோஜாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் கொலையான ரோஜாவின் கணவர் சிலம்பரசனை விசாரணைக்காக கிள்ளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் சிலம்பரசனின் தாயார் சுந்தரி (55) என்பவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து ரோஜாவின் சகோதரரான சீர்காழி அரசூரை சேர்ந்த திலீப் என்பவர் கிள்ளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கொலை, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தினர். சிலம்பரசன் மற்றும் அவரது தாயார் சுந்தரியிடம் கிள்ளை போலீசார் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணம் குறித்து தெரிய வந்துள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
கோவில்பட்டியில் பைக் திருடனுடன் அதிமுக முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கைது
சிலம்பரசனுக்கும் ரோஜாவுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதன் பிறகு இவர்களுக்கு இடையே திருமணத்தை மீறிய உறவும் இருந்துள்ளது. இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் ரோஜா சுமார் 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதனால் சிலம்பரசனுக்கும் ரோஜாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, அதனால் அவர் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விடுவாராம்.
நிச்சயதார்த்தத்திற்கு பிறகு ரோஜாவுடன் உறவு இருந்தாலும் தன்னை மீறி வேறு யாரேனும் ரோஜாவிற்கு பழக்கம் இருக்கலாம் என சிலம்பரசன் சந்தேகப்பட்டு உள்ளார். இதுவே இவர்களுக்கிடையே தகராறு ஏற்படுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற சிலம்பரசன், வீட்டிலிருந்த பிளேடை எடுத்து தனது மனைவி ரோஜாவை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். மேலும் ரோஜாவின் மாமியார் சுந்தரி, ரோஜாவிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு துன்பப்படுத்தியதாகவும் ரோஜாவின் குடும்பத்தினர் தெரிவித்த புகாரின் அடிப்படையில் சுந்தரி மீது வரதட்சணை கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.