திருச்செந்தூரில் பட்டப்பகலில் மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி 4 சவரன் தங்க நகை பறிப்பு. மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் டி.பி. ரோட்டில் உள்ள ஆனந்த விநாயகர் காலனியைச் சேர்ந்தவர் பிச்சம்மாள். 74 வயதான இவர் இன்று மதியம் தன்னுடைய வீட்டில் தனியாக இருந்து சமையல் செய்வதற்கு காய்கறி வெட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டின் வெளியே இருந்து குடிக்க தண்ணீர் வேண்டும் என்று சத்தம் கேட்டுள்ளது. வெளியே வந்து பிச்சம்மாள் பார்த்தபோது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அந்த வாலிபர் பிச்சம்மாளிடம் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த வாலிபர் கையில் ஒரு தண்ணீர் கேன் கொண்டு வந்துள்ளார். அந்த தண்ணீர் கேனை வாங்கிய பிச்சம்மாள் வீட்டிற்குள் சென்று தண்ணீர் நிரப்பச் சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் அந்த மர்ம நபர் பிச்சம்மாள் மீது மிளகாய் பொடியை தூவி உள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத பிச்சம்மாள் வாசலில் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த மர்ம நபர் பிச்சம்மாள் கழுத்தில் கிடந்த 4 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இந்த சம்பவம் குறித்து அருகே இருந்தவர்களிடம் பிச்சம்மாள் விபரத்தை கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் திருச்செந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நகையை பறிகொடுத்த பிச்சம்மாளிடம் திருடிச் சென்ற வாலிபர் குறித்த விவரங்களை சேகரித்து சென்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நகையை பறித்துச் சென்ற திருடனை தேடி வருகின்றனர்.
திருச்செந்தூரில் பட்டப்பகலில் மூதாட்டி கழுத்தில் கிடந்த தங்க நகையை மிளகாய் பொடி தூவி பறித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.