சென்னை வியாசர்பாடி மூன்றாவது பள்ளத் தெருவை சேர்ந்தவர் தாமோதர கண்ணன் 24 இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இவரது செல்போனில் ஆன்லைன் டேட்டிங் செயலியை இன்ஸ்டால் செய்து உள்ளார். அப்போது அகிலா என்ற ஒரு பெண் தாமோதர கண்ணனிடம் மிகவும் ஜாலியாக பேசி உள்ளார். அப்போது அவர் தனக்கு அவசரத் தேவையாக 500 ரூபாய் தேவைப்படுகிறது என கேட்டுள்ளார். தாமோதர கண்ணனும் பணம் அனுப்பி உள்ளார்.
அதன் பிறகு தாமோதர கண்ணனால் அகிலாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. மீண்டும் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி தாமோதர கண்ணனை தொடர்பு கொண்ட நபர்கள் தாங்கள் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பேசுவதாகவும் நீங்கள் பணம் அனுப்பிய அகிலா என்ற பெண் தற்கொலை செய்து கொண்டார் எனவும் உங்கள் மீது வழக்கு பதிவு செய்ய போகிறோம் என மிரட்டி உள்ளனர்.
இதனால் பயந்து போன தாமோதர கண்ணன் தனது வங்கி கணக்கில் இருந்த 13 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை அனுப்பி உள்ளார். அந்த பணத்தை பெற்றுக் கொண்ட நபர்கள் மீண்டும் அவரிடம் போன் செய்து இந்த வழக்கில் உங்கள் மீது எஃப் ஐ ஆர் போடாமல் இருக்க வேண்டும் என்றால் 70000 ரூபாய் பணம் வேண்டும் எனக் கூறியுள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வியாசர்பாடி குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சைபர் கிரைம் போலீசார் தாமோதரன் கண்ணனை மிரட்டிய நபரின் செல்போன் எண்களை தொடர்ந்து கண்காணித்து லோக்கேஷன் எடுத்து வந்தனர். இந்நிலையில் அவரை மிரட்டிய தொலைபேசி எண்கள் அனைத்தும் ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் என்ற ஏரியாவில் இருந்து தொடர்ந்து அவர்கள் பேசி வருவது தெரிய வந்தது.
இதனை அடுத்து நேற்று வியாசர்பாடி குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயசித்ரா தலைமையிலான போலீசார் பட்டாபிராம் பகுதிக்கு சென்று ஐந்து இளைஞர்களை கைது செய்தனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் பட்டாபிராம் வேளாங்கண்ணி குறுக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த லியோதுரை 25. பட்டாபிராம் உழைப்பாளர் நகர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் 26. அதே பகுதியைச் சேர்ந்த தமிழ் என்கின்ற தமிழன் 25. முகமது ரியாஸ் 23. பிரித்திவிராஜ் 28 என்பது தெரியவந்தது இவர்கள் பொழுதுபோக்கிற்காக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு டேட்டிங் செயலியை தங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
அதில் ஆண் பெண் என பலரும் சாட்டிங் செய்வதையும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டு டேட்டிங் செல்வதையும் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இதனை அடுத்து இவர்கள் தங்களை பெண் போல அந்த டேட்டிங் செயலியில் பெயரை மாற்றி பதிவிட்டுள்ளனர். அப்பொழுது பல ஆண் நண்பர்கள் இவர்களுடன் சாட்டிங் செய்துள்ளனர். சபலத்திற்கு ஆளான பலரும் இவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணத்தை அக்கவுண்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் பணத்தை வாங்கிய அடுத்த நிமிடமே இவர்கள் பணம் கொடுத்த நபரை பிளாக் செய்து அதன் பிறகு இவர்களை தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு செய்துள்ளனர். பணம் பறி கொடுத்தவர்களும் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் நமக்கு அவமானம் என புகார் கொடுக்காமல் இருந்துள்ளனர். இந்த ஏமாற்று கும்பலிடம் சிக்கியவர் தான் வியாசர்பாடியை சேர்ந்த தாமோதர கண்ணன். அந்த புகாரின் பேரில் தான் இந்த மோசடி கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடமாகவே இவர்கள் பலரையும் ஏமாற்றி வந்துள்ளது போலிசாரின் விசாரணையில் தெரிய வந்தது இதனை அடுத்து லியோ துரை. சீனிவாசன். தமிழன். முகமது ரியாஸ். பிரித்விராஜ் ஆகிய ஐந்து பேர் மீதும் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.