சென்னை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஈரானிய கொள்ளையர்களை பற்றி பல திடுக்கிடும் புது தகவல்கள்.மூன்றாவதாக கைது செய்யப்பட்ட சல்மான் நேற்று முன்தினமே கர்நாடக பதிவு எண் கொண்ட பைக்குடன் சென்னை வந்து விமான நிலைய வாசலில் காத்திருந்துள்ளார். சுராஜ்அம்ஜத் மீசம், ஜாபர் இருவரும் தனித்தனி விமானங்களில் நேற்று அதிகாலை சென்னை வந்து இறங்கியுள்ளனர்.பிறகு அனைவரும் விமான நிலைய வாகன நிறுத்தும் இடத்தில் கலந்துரையாடி உள்ளனர்.சல்மான் இருசக்கர வாகனத்தை ஒப்படைத்துவிட்டு, நான் தரமணி ரயில் நிலையத்தில் காத்திருக்கிறேன். வேலையை முடித்துவிட்டு வாருங்கள் என அனுப்பியுள்ளார்.
இருசக்கர வாகனத்தை வாங்கிய ஜாபர், அம்ஜத்தை ஏற்றிக்கொண்டு 5.45 மணிக்கு சைதாப்பேட்டையில் தொடங்கி கிண்டி, திருவான்மியூர் சாஸ்திரி நகர் இறுதியாக வேளச்சேரியில் கைவரிசை காட்டிவிட்டு, அடுத்த வாரம் மீண்டும் வரலாம் என்று திட்டத்துடன் தரமணி ரயில் நிலையம் அருகே உள்ள பார்க்கிங்கில் பைக்கை நிறுத்தியுள்ளனர். ஆறு செயின் களையும் பங்கு பிரித்துள்ளனர்.
சல்மான் மூன்று செயின்கள்,அம்ஜத் மீசத்துக்கு ( suraj) ஒரு செயின்( அதை அவர் கழுத்தில் அணிந்து கொண்டுள்ளார்).ஜாபருக்கு இரண்டு செயின்கள் என எடுத்துக் கொண்டு வாடகை காரில் சென்னை விமான நிலையம் சென்றுள்ளனர். அவசர அவசரமாக டிக்கெட் கவுண்ட்டர் சென்று, அம்ஜத் ஹைதராபாத் செல்வதற்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு விமானத்தில் ஏறி தனது இருக்கை எண்ணான 12 க்கு பதில் 13-வது இருக்கையில் அமர்ந்துள்ளாா்.
இதற்கிடையில் மூதாட்டிகளிடம் தொடர் கைவரிசை காட்டியது ஈரானிய கொள்ளையர்கள் தான் என்பதை சிசிடிவி பதிவுகள் மூலம் உறுதிப்படுத்தி கொண்ட சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையிலான போலீசார், சென்னை விமான நிலைய போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் உதவியுடன் கொள்ளையர்களை பிடிக்க தீவிரமாக இறங்கினர்.
அனைத்து, உள்நாட்டு டிக்கெட் கவுண்ட்டர்களுக்கும் சென்று, கடைசியாக டிக்கெட் எடுத்துச் சென்றவர்கள் யார்? இந்த நபர்களை பார்த்தீர்களா என போட்டோக்களை காண்பித்து கேட்டுள்ளனர். அவர்கள் ஆமாம் என சொல்லவே,உடனடியாக சென்னை விமான நிலையத்தில் உள்ள Air Traffic control உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கி விமானத்தை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். சென்னை விமான நிலைய காவல் ஆய்வாளர் பாண்டி தலைமையிலான போலீசார் ஹைதராபாத் செல்ல தயாராக இருந்த விமானத்துக்குள் ஏறினர்.
டிக்கெட் கவுண்ட்டரில் சொன்னபடி 12 இருக்கையை பார்த்தபோது அங்கு யாரும் இல்லை.அதற்கு அடுத்த பதிமூன்றாவது இருக்கையில் ஒரு இளைஞர் கழுத்தில் செயின் அணிந்த நிலையில் அமர்ந்திருந்தார். அவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்த போது முதலில் தான் யார் என்று தெரியாமல் விளையாடுகிறீர்கள் I am Big shot என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். தொடர்ந்து விசாரிக்கவே முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
அவரை போட்டோ எடுத்து உடனடியாக உயரதிகாரிகளுக்கு அனுப்பிய போது, ஆடைகளை மாற்றி இருக்கிறார் காலனியை மாற்றவில்லை சிசிடிவி பதிவானது போல இடது கையில் கயிறு கட்டியுள்ளார்.கொள்ளையில் ஈடுபட்ட நபர் தான் அவரை தூக்குங்கள் என உத்தரவிடவே அம்ஜத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மும்பை செல்வதற்காக ஜாபர் போர்டிங் பாயிண்ட்டில் நிற்பதாக தெரிவித்துள்ளார். போலீசார் மும்பை விமான போர்டிங் பாயிண்ட்டை நோக்கி சென்ற போது, சுதாரித்துக் கொண்ட ஜாபர் தன்னிடமிருந்து இரு செயின்களையும் ஒரு டிஷ்யூ பேப்பரில் சுற்றி பபுள்கம்மை அதன் மேல் ஒட்டி அருகில் பாத்ரூமில் ஒட்டி வைத்து அங்கேயே மறைந்து இருந்துள்ளார்.
ஒருவேளை போலீசார் தன்னை பிடித்தால் கூட தான் திருடவில்லை தன்னை செக்கிங் செய்து கொள்ளுங்கள் என நடிப்பதற்காக இந்த வேலையில் ஈடுபட்டுள்ளார். ஆனால் போலீசார் தீவிரமாக தேடி பாத்ரூமில் மறைந்திருந்த ஜாபரை கைது செய்து செய்தனர். இதையடுத்து இருவரையும் அழைத்து வந்து விசாரித்த போது தான், சல்மான் என்று ஒரு நபர் இருப்பதும் சல்மானின் ரோல் என்ன என்பதும் தெரிய வந்தது. அவர் தங்கள் இருவரையும் விமானத்தில் ஏற்றிவிட்டு, ஓலா ஆட்டோ புக்கிங் செய்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சென்று விட்டார் என தெரிவித்துள்ளனர்.
சல்மானின் செல்போன் எண்ணையும் போலீசாரிடம் கொடுத்துள்ளனர். சல்மான் செயின் பறிப்பு சம்பவத்தில் நேரடியாக ஈடுபடவில்லை என்பதால் அவரது போட்டோ போலீசாரிடம் இல்லை. மீண்டும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் சல்மான் ஏறிய ஆட்டோ பதிவு எண்ணை கண்டுபிடித்து ஆட்டோ டிரைவரை விசாரித்தபோது கோயம்பேட்டில் இறங்கியவுடன் அந்த நபர் சென்ட்ரலுக்கு வேறு ஒரு ஆட்டோவில் ஏறி சென்றார் என தெரிவித்துள்ளார்.
கொள்ளையர்கள் ஜாபர், அம்ஜத் கொடுத்த எண்ணில் தொடர்பு கொள்ள முயன்றபோது சல்மானின் செல்போன் அனைத்து வைக்கப்பட்டு இருந்தது . இதையடுத்து சம்மந்தப்பட்ட தொலை தொடர்பு சேவை நிறுவனத்தை தொடர்பு கொண்ட போலீசார் அந்த எண்ணுக்குரிய நபரின் போட்டோவை அனுப்பி வைக்குமாறு கேட்டு பெற்றுள்ளனர்.பிறகு வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் மனோகர் தலைமையிலான போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளை சந்தித்தனர்.
ரயில்வே பாதுகாப்பு படை போலீசார்ருடன் இணைந்து சென்ட்ரலில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது தலையில் தொப்பியுடன் சல்மான் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆந்திர மாநிலத்தில் பணியாற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரை சென்னை ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் சென்னை போலீசாரும் உஷார் படுத்தினர். சல்மானின் போட்டோவை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளனர். பினாகினி எக்ஸ்பிரஸ், ஓங்கோல் ரயில் நிலையம் சென்றபோது ஆந்திர மாநிலத்தில் பணியாற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சல்மானை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பிறகு சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சென்னை போலீசார் சல்மானை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் என்கவுண்டரில் பலியான ஜாபரின் சடலத்தை பெற அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே வந்துள்ளனர்.அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் அனைவருமே திருட்டு வழிப்பறியில் தொடர்புடையவர்கள் என்பதால் சடலத்தை பெற பெண்களை அனுப்பி வைத்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
செயின் பறிப்பு கொள்ளையன் என்கவுண்டர் – காவல் ஆணையர் அருண் விளக்கம்