பாலியல் இச்சைக்கு இணங்காததால் அத்தையை கொலை செய்த ஐடி ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை பாரதிபுரம் நெல்லையப்பர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். ஐடி நிறுவன ஊழியரான இவருக்கு திருமணமாகி கிருஷ்ணவேணி (35) என்கிற மனைவியும், ஒரு பெண் ஒரு ஆண் என இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜெயமுருகனின் உறவினரான ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் சென்னை எழும்பூரை சேர்ந்த அருண்குமார் (32) என்பவர் கடந்த 14.06.2016 அன்று தனது அத்தை கிருஷ்ணவேணி அவரது வீட்டில் தனியாக இருந்தபோது அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
அப்போது கிருஷ்ணவேணி அருண்குமாரிடம் கடுமையாக சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார் தனது பாலியல் இச்சைக்கு இணங்காத அத்தை கிருஷ்ணவேணியை கடுமையாக தாக்கி கழுத்து, தாடை மற்றும் வயிற்று பகுதிகளில் கத்தியால் சரமாரியாக குத்தி கிழித்துள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கிருஷ்ணவேணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணவேணியின் தம்பி உதயச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சிட்லபாக்கம் போலீசார் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் அருண்குமாருக்கு எதிராக வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா ஆஜரானார். இதில் அருண்குமார் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதியானதால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி எழிலரசி தீர்ப்பளித்தார்.