சம்பவம் செந்திலின் கூட்டாளி ஈசாவிடம் 3 நாட்கள் விசாரணை. சேலம் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ள உள்ளனர். செந்திலின் தூத்துக்குடி, சென்னை நெட்வொர்க் முழு பின்னணி குறித்தும் போலீசார் கேட்டறிந்தனர். செந்திலை தேடி தனிப்படை போலீசார் மும்பையில் முகாம் என தகவல். ரவுடி எலி யுவராஜையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி பெரம்பூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, உறவினர் வழக்கறிஞர் அருள் உள்பட மொத்தம் 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலையாளிகளின் செல்போன் அழைப்புகளை வைத்து (call detail record) இதுவரை இந்த வழக்கில் சுமார் 200 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அரசியல் காரணமாக கொலை நடந்ததா? அல்லது ரவுடிகளுடன் உள்ள முன் பகை காரணமாக கொலை நடந்ததா? ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட விரோதமா? என பல கோணங்களில் ஒரு மாதமாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு தலைமையிலான கும்பலுக்கு நிதி உதவி, சட்ட உதவி் என பக்கபலமாக இருந்தது பிரபல ரவுடிகள் சம்பவம் செந்தில், சீசிங் ராஜா மற்றும் சிறையில் இருக்கும் மற்றொரு ரவுடி என தெரிய வருகிறது..
வடமாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு, சம்போ செந்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பத்து நாட்கள் முகாமிட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
ஆனால் சம்பவம் செந்தில் சிக்கவில்லை..
இந்த நிலையில் தற்போது சம்பவம் செந்திலை தேடி தனிப்படை போலீசார் மும்பையில் முகாமிட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் பொன்னை பாலு வழக்கறிஞர் அருள், ராமு, சிவ சக்தி ,ஹரிதரன் ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதில் பொன்னை பாலு வழக்கறிஞர் அருள் ஆகியோர் மூன்றாவது முறையாக போலீஸ் காவலில் விசாரிக்கப்படுகின்றனர்.
கொலையாளிகளில் முக்கியமானவர்களாக கருதப்படும் பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் ஆகியோர் கடந்த இரண்டு முறை விசாரணை நடந்த போது , ஒரு சில தகவல்களை மாற்றி கூறியுள்ளனர்.
ஆனால் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை விசாரித்த போது அவர்கள் வேறு விதமாக பதில் அளித்ததுடன், கொலை திட்டம் தொடர்பான வேறு சில புதிய தகவல்களையும் தெரிவித்துள்ளனர். எனவேதான் மூன்றாவது முறையாக பொன்னை பாலு மற்றும் வழக்கறிஞர் ஆகிய அருள் ஆகியோர் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் தூத்துக்குடியை சேர்ந்த சில முக்கிய புள்ளிகளை பற்றியும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் சேலம் சிறையில் இருக்கும் சம்பவம் செந்திலின் கூட்டாளி ஈசாவை கட்டிட ஒப்பந்தக்காரர் கார்த்திக்கை மிரட்டி பணம் பறித்த வழக்கில் புது வண்ணாரப்பேட்டை போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாகவும் விசாரித்துள்ளனர்.
சம்பவம் செந்தில் நெட்வொர்க், ஈசா அவரை சந்திக்கும் இடம், சென்னையில் அவருக்கு யார் யாரெல்லாம் மாமூல் வசூலித்து கொடுப்பவர்கள்? ஆம்ஸ்ட்ராங் கொலையில் எந்தெந்த ஊரை சேர்ந்த கூலிப்படை கும்பல்களுக்கு தொடர்பு உள்ளது? என விசாரணை நடத்தியுள்ளனர்.
சேலம் மத்திய சிறையில் இருக்கும் சம்பவம் செந்திலின் மற்றொரு கூட்டாளி கூறப்படும் எலி யுவராஜையும், கட்டிட காண்ட்ராக்டர் கார்த்திகை மிரட்டி பணம் பறித்த வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக, எலி யுவராஜுக்கு தெரிந்த தகவல்களை பெற்று அதன் அடிப்படையில் விசாரணையை தீவிர படுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.