உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில், கோடிக்கணக்கான பக்தர்கள் சங்கம் நகரத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் மகா கும்பமேளாவில் புனித நீராடச் செல்கிறார்கள். அதே நேரத்தில், இந்த புனித நேரத்தில் கூட சிலர் சில்மிஷ செயல்களை செய்து அதிர்ச்சியூட்டி வருகின்றனர்.சங்கத்தில் பெண்கள் குளிப்பதைப் போன்ற காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றுகின்றனர். இந்த வீடியோக்கள் டார்க் வெப்பிலும் விற்கப்படுகின்றன.
மகா கும்ப மேளத்தில் பெண்கள் குளிப்பதை வீடியோவாக வெளியிட்டது தொடர்பாக போலீசார் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். டார்க் வெப்பில் வீடியோக்களை விற்ற வழக்கு தொடர்பான விசாரணை பிரயாக்ராஜிலிருந்து குஜராத் மற்றும் மகாராஷ்டிரா வரை விரிவடைந்துள்ளது.
அந்த விசாரணையில், மகாராஷ்டிராவின் லத்தூரைச் சேர்ந்த பிரணவ் டெலி, சாங்லியைச் சேர்ந்த ஒரு சிறுவனையும் குஜராத் போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட சந்திரபிரகாஷ் பூல்சந்த் மோண்டாவின் யூடியூப் சேனலில் கும்பமேளாவின் வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.அவர் சிசிடிவி சேனல் 11 என்ற பெயரில் ஒரு டெலிகிராம் ஆக்கவுண்டை உருவாக்கி, வீடியோக்களைப் பதிவேற்றி விற்று பணம் சம்பாதித்துள்ளார்
இந்த வழக்கில், குஜராத் காவல்துறையின் விசாரணையில், லத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரணவ் டெலி என்ற குற்றவாளி வெளிநாட்டு ஹேக்கர்களுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் ருமேனியா, அட்லாண்டாவைச் சேர்ந்த ஹேக்கர்களுடன் தொடர்பில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் பிரயாக்ராஜில் உள்ள மால்கள், மருத்துவமனைகளின் வீடியோக்களை உருவாக்கி அவற்றை டார்க் வெப்பில் விற்பனை செய்து வந்துள்ளார்.
லத்தூரைச் சேர்ந்த இந்தக் குற்றவாளியுடன், மகாராஷ்டிராவைச் சேர்ந்த, சாங்லி மாவட்டத்தில் உள்ள ஒரு இளைஞரும் கூட்டாளியாக இருந்துள்ளார். அவர்கள் இருவரும் டெலிகிராமில் வெவ்வேறு அக்கவுண்டுகளை உருவாக்கி, இந்த வீடியோக்களை ரூ.2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை டெலிகிராம் அக்கவுண்டில் உள்ளவர்களுக்கு வழங்கி பணம் சம்பாதித்துளனர்.
லத்தூரில் இருந்து பணப் பரிவர்த்தனைக்கான தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குஜராத் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. லத்தூர் குற்றம் சாட்டப்பட்டவர் தனது கணக்கில் வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றுள்ளார். குஜராத், பிரயாக்ராஜில் இரண்டு எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 13 எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இத்துடன், காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. காவல்துறையின் சைபர் குழு பல்வேறு சமூக ஊடக தளங்களை ஆராய்ந்து வருகிறது. இந்த வி விஷயத்தில் ஆட்சேபனைக்குரிய பதிவுகளை வெளியிடுபவர்கள், வதந்திகளைப் பரப்புபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.