50 கிராம் பவுனுக்காக மூதாட்டி ஒருவரை நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்ற தந்தை ,மகளை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் 50 கிராம் பவுனுக்காக மூதாட்டியை கொலை செய்து, சடலத்தை சூட்கேஸில் அடைத்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் விட்டு சென்ற தந்தை, மகளை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவிஸ்ரீ (18). கல்லூரி மாணவி. அவரது தந்தை பாலசுப்பிரமணியம் (46). இருவரும் சூளூர்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வரும் ரயிலில் நேற்று மாலை வந்துள்ளனர். ரயில் மீஞ்சூரில் நின்றவுடன் இருவரும் இரண்டு சூட்கேசுகளுடன் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளனர்.
இரவு நேரம் என்பதால் ரயில் இறங்கிய இடத்திலேயே சூட்கேஸை விட்டுவிட்டு நைசாக நழுவியுள்ளனர். அதைப்பார்த்த பொது மக்கள் ஆர்பிஎஃப் (RPF) போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.அவர்களை தொடர்ந்து சென்று ஆர்பிஎஃப் போலீசார் பிடித்தார். அவர்கள் வைத்துவிட்டு சென்ற சூட்கேஸில் ஏதோ மர்மப் பொருள் இருப்பத கண்டு உடனே ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு விரைந்து வந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாரும், கும்மிடிப்பூண்டி காவல் நிலைய போலீசாரும், அந்த சூட்கேஸை திறந்து பார்த்தனர்.
அதனுள் பெண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப் பெண்ணிற்கு 65 வயது இருக்கும். மற்றொரு சூட்கேஸில் தேவிஸ்ரீ கொண்டுவந்த பொருட்கள் இருந்துள்ளன. இதையடுத்து இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் ராஜேந்திரன் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு பிள்ளைகள் உள்ளனர். பொற்கொல்லர் தொழில் செய்து வரும் இவர், அதே பகுதியில் வசித்து வந்த மன்னெம் ரமணி(65). அவர் அணிந்திருந்த நகை மீது ஆசைப்பட்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முகத்தை பெட்ஷீட்டால் மூடி, கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக தெரிவித்தார். மேலும் அவர் அணிந்திருந்த தாலி சரடு மூன்று சவரன், கருப்பு பூசல் 2 சவரன் மற்றும் இரண்டு கம்மல் ஒரு சவரன் மொத்தம் 50 கிராம் நகையை உருக்கி வீட்டில் மறைத்து வைத்து விட்டதாக தெரிவித்தார்.
மேலும் அந்த மூதாட்டியின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி, சூட்கேஸில் அடைத்தோம். பிறகு, ரயிலில் ஏறி சென்னைக்கு வர திட்டமிட்டோம். சூளூர்பேட்டையில் ரயிலில் ஏறினோம். ரயில் மீஞ்சூர் வந்தபோது, இங்கு இறங்கி சூட்கேஸை வைத்துவிட்டு சென்றுவிடலாம் என திட்டமிட்டோம். சூட்கேஸுடன் இறங்கி பிளாட்பாரத்தில் வைத்துவிட்டு, தப்பி ஓட முயன்றபோது பிடிபட்டுவிட்டோம் என்று பாலசுப்பிரணியம் கூறினார்.
இச்சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்பு ஆய்வாளர் வி.கே மீனா, கொருக்குப்பேட்டை இருப்பு பாதை காவல் உதவி ஆய்வாளர் பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
, சடலத்தை விட்டு சென்றவர் கைது.
Man arrested after killing in Nellore and leaving dead body at Meenjur railway station |APC NEWS TAMIL