60 லட்சத்திற்கு பணம் தராமல் தானியங்கள் வாங்கி விவசாயிகளை ஏமாற்றியவர் கைது
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் தர்மராஜன். இவர் கடந்த கொரோனா காலகட்டமான, 2020- 21 ஆம் ஆண்டில், விவசாயி மற்றும் வியாபாரிகளிடம் மணிலா, நெல், திணை, கம்பு சோளம் உள்ளிட்ட தானியங்களை வாங்கியுள்ளார்.
மேலும், அதற்குண்டான பணத்தை, விவசாயிகளுக்கு தராமல், கடந்த இரண்டு வருடமாக ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட புதுக்கூரைப்பேட்டை பகுதியை சேர்ந்த இளங்கோ என்ற விவசாயி, விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மதுரையில் தலைமறைவாக இருந்த, தர்மராஜனை காவல்துறையினர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரனையில் விருத்தாச்சலம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 20-க்கும் மேற்பட்ட விவசாய மற்றும் வியாபாரிகளிடமிருந்து, சுமார் 60 லட்சம் மதிப்பிலான, தானிய பொருட்களை, வாங்கியதும், அதற்குண்டான பணத்தை தராமல், இரண்டு வருடமாக இழுத்தடிப்பு செய்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை தர்மராஜனிடம் கேட்டபோது, தகாத வார்த்தைகளால் திட்டியும், மிரட்டியதும் தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறையினர் மோசடி வழக்கு பதிவு செய்து தர்மராஜனை சிறையில் அடைத்தனர்.
மேலும், விவசாயிகளிடம் ஏமாற்றிய பணத்தை பெற்றுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகளிடம், தானிய பொருட்கள் வாங்கி, பணத்தை தராமல் சுமார் 60 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றிய மோசடி மன்னன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.