சொத்து தொடர்பான வழக்கை இழுத்தடித்து, ஆவணங்களையும் தர மறுத்த வழக்கறிஞரைக் கொன்று, அவரது உடலை எரித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் அருகேயுள்ள பீமநகரி கிராம குளக்கரையில் நேற்று காலை எரிக்கப்பட்ட நிலையில் ஆண் உடல் கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து சென்ற ஆரல்வாய்மொழி போலீஸார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, திருப்பதிசாரம் கீழூரைச் சேர்ந்த இசக்கிமுத்து (21) என்பவர், ஒருவரைப் பிடித்து இழுத்துச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் தக்கலை குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபி (50) என்பதும், அவரை இசக்கிமுத்து கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.
இசக்கிமுத்துவின் சொத்து தொடர்பான வழக்கை கிறிஸ்டோபர் சோபி நடத்தி வந்ததாவும் நீண்ட நாட்களாக வழக்கு முடியாமல் இருந்ததால், தான் கொடுத்த தனது சொத்துப் பத்திரங்களை தன்னிடம் திருப்பிக் கொடுக்குமாறு இசக்கிமுத்து கேட்டிருக்கிறார் , அதற்கு வழக்கு முடிந்த பின்னர் ஆவணங்களைத் தருவதாக கிறிஸ்டோபர் சோபி கூறி நாட்களை கடத்தி உள்ளார்.
இந்த நிலையில், கிறிஸ்டோபர் சோபி தனது தோட்டத்தில் நடுவதற்கு வாழைக் கன்றுகள் வேண்டும் என இசக்கிமுத்துவிடம் கேட்டுள்ளார். தனது தோட்டத்தில் வாழைக் கன்றுகள் இருப்பதாகக் கூறிய இசக்கிமுத்து, அவரை நவம்பர் 6ம் தேதி இரவு தோட்டத்துக்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு வந்த கிறிஸ்டோபர் சோபியை பீமநகரியில் உள்ள குளக்கரைக்கு அழைத்துச் சென்று இசக்கிமுத்து கொலை செய்துள்ளார். பின்னர் இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்து கிறிஸ்டோபர் சோபியின் உடல் மீது ஊற்றி, தீவைத்து எரித்து விட்டு அங்கிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளார் என்று போலீஸ் தெரிவித்துள்ளனர்.
வழக்கறிஞரை கட்சிக்காரர் இசக்கிமுத்துவேல் கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்த நிலையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையில் தொடர்புடைய ஐயப்பன், தளவாய், வன்னிய பெருமாள், ராஜபாண்டியை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.