Homeசெய்திகள்க்ரைம்சென்னை விமான நிலையத்தில் முறைகேடுகளுக்கு துனை போன அலுவலர் சஸ்பெண்ட் 

சென்னை விமான நிலையத்தில் முறைகேடுகளுக்கு துனை போன அலுவலர் சஸ்பெண்ட் 

-

சென்னை விமான நிலையத்தில் முறைகேடுகளுக்கு துனை போன அலுவலர் சஸ்பெண்ட் 

சென்னை விமான நிலையத்தில், முறைகேடாக போலி பாஸ்போர்ட்களில் பயணிப்பவர்களுக்கும், தங்கம் கடத்தல் ஆசாமிகளுக்கும், துணை போன குடியுரிமை அலுவலர் ஒருவரை, இம்மிகிரேஷன் தலைமை ஆணையர் சஸ்பெண்ட் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளும் விசாரணை நடத்த முடிவு எடுத்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில், வெளிநாடு செல்லும் விமான பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதித்து அனுப்புவதற்காக, குடியுரிமை பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த பிரிவின் தலைமை அலுவலகம், சென்னை சாஸ்திரி பவனில் உள்ளது. இந்த பிரிவில் பணியாற்றுவதற்கு காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள், டெபிட்டேசன் முறையில் பணி அமர்த்தப்படுகின்றனர்.

மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுக்கும் திமுக அரசின் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்

இந்த நிலையில் அவ்வாறு டெப்டேஷன் முறையில் பணியமர்த்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர், சரவணன் என்பவர் கடந்த ஓராண்டு காலமாக, சென்னை விமான நிலைய குடியுரிமை பிரிவில், இம்மிகிரேஷன் அலுவலராக பணியாற்றி வருகிறார்.

இந்த இம்மிகிரேஷன் அலுவலர்கள், முறைகேடுகள் எதிலும் ஈடுபடாமல் சரியாகப் பணியாற்றுகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காக, விஜிலன்ஸ் பிரிவு ஒன்று செயல்பட்டு வருகிறது.  விஜிலென்ஸ் பிரிவு கண்காணிப்பின் போது,  இமிகிரேஷன் அலுவலர் சரவணன் செயல்பாட்டில் சந்தேகம் ஏற்பட்டதனை அடுத்து சரவணனை விஜிலென்ஸ் பிரிவு, தீவிரமாக தொடர்ந்து கண்காணித்துள்ளது. மேலும் இமிகிரேஷன் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது சரவணன், வெளிநாடுகளுக்கு செல்வதற்காக வரும் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் பரிசோதிக்கும் போது, முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், அதேபோல் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம், முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் தெரிய வந்தது. விஜிலன்ஸ் பிரிவினர், சரவணன் முறைகேடுகள் குறித்த ஆவணங்களுடன், சரவணன் இடம் விசாரணை மேற்கொண்ட போது சரவணன், தகுந்த விளக்கம் அளிக்கவில்லை. இதை அடுத்து சரவணன் தவறு செய்வது உறுதியாகியுள்ளது.

உடனடியாக விஜிலென்ஸ் பிரிவினர், சென்னை சாஸ்திரி பவனில் உள்ள, இம்மெகிரேஷன் பிரிவு தலைமை ஆணையருக்கு, சரவணன் குறித்து அறிக்கை அனுப்பியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சரவணனை, இமெகிரேஷன் தலைமை ஆணையர் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே  சரவணன் குறித்து, இமிகிரேஷன் விஜிலென்ஸ் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது சரவணன் பாஸ்போர்ட் விவகாரங்களில் மட்டும் இன்றி, வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்க கடத்தல்களுக்கும் உடந்தையாக செயல்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் கடத்தல் ஆசாமிகள், சுங்கச் சோதனைக்கு முன்னதாக, குடியுரிமைச் சோதனைக்காக, இமிகிரேஷன் பிரிவுக்கு வரும் போது அவர்கள் கடத்தி வரும் தங்கத்தை, சரவணன் வாங்கி வைத்துக் கொண்டு, சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் எடுத்துச் செல்வதற்கு உதவி புரிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இம்மெகிரேஷன் பிரிவினர் இது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே  தங்கம் கடத்தலுக்கு உடனடியாக, விமான நிலைய குடியுரிமை பிரிவு அலுவலர் ஒருவர் செயல்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளதால், சென்னை விமான நிலைய சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறை இதுகுறித்து விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

இமிகிரேஷன் அலுவலர் சரவணன் செயல்பாடுகள் குறித்து விஜிலன்ஸ் அதிகாரிகளின் விசாரணை இன்னும் முடியவில்லை என சுங்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது. அவர்கள் விசாரணை முடிந்து, முறையான அறிக்கை கொடுத்த பின்பு,  தங்கம் கடத்தல் குறித்து விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

MUST READ