ஆன்லைன் பிசினஸ் ஆசை காட்டி புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.34.68 லட்சம் மோசடி.
புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கடலூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் நந்தகுமார் (45), தொழிலதிபர். இவரை சமூக வலைதளம் மூலமாக ஆன்லைன் பிசினஸ் எனும் முறையில் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர், குறைந்த காலத்தில் தங்களது பணத்துக்கு அதிக வருமானம் கிடைக்கும் என ஆசைவார்த்தைகளை கூறியுள்ளார். இதையடுத்து முதல் கட்டமாக குறைந்த பணத்தை ஆன்லைனில் முதலீடு செய்துள்ளார். அதற்கு குறுகிய காலத்தில் இரட்டிப்பான பணம் கிடைக்கவே, அடுத்ததாக மர்மநபர் கூறியபடி கடந்த 11 முதல் 19ம்தேதி வரையிலான காலத்தில் அடுத்தடுத்து லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து உள்ளார்.
அதன்படி மொத்தமாக ரூ.34 லட்சத்து 68 ஆயிரத்து 484 ரொக்கத்தை அனுப்பியுள்ளார்.அதற்கான லாபத்தை குறிப்பிட்ட காலத்தில் அவர் எதிர்பார்த்திருந்த நிலையில், மொத்த ரொக்கத்தையும் திரும்ப பெற முடியாத வகையில், மீண்டும் அந்த நபரை தொடர்பு கொண்டபோது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் ஆன்லைன் வங்கிக் கணக்கும், சேவையும் திடீரென முடக்கப்பட்டது.
அதன்பிறகே தான் முதலீடு செய்த மொத்த பணமும் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த நந்தகுமார் இதுபற்றி புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் மோசடி (420) பிரிவின்கீழ் அடையாளம் தெரியாத மர்ம நபர் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுவையில் ஏற்கனவே அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என 2,600க்கும் மேற்பட்டோர் இதுவரை ரூ.28 கோடி வரையிலான பணத்தை ஆன்லைனில் இழந்து பரிதவித்து வருவது குறிப்பிடத்தக்கது.