Homeசெய்திகள்க்ரைம்இந்தியாவின் ஆட்சி மொழியாகும் தகுதி தமிழ் மொழிக்குதான் உள்ளது... அடித்துச்சொல்லும் ஜெகத் கஸ்பர்!

இந்தியாவின் ஆட்சி மொழியாகும் தகுதி தமிழ் மொழிக்குதான் உள்ளது… அடித்துச்சொல்லும் ஜெகத் கஸ்பர்!

-

- Advertisement -

தமிழ் வெறும் பேச்சுக்கான, தொடர்புக்கான மொழி அல்ல. ஒரு மாபெரும் நாகரீகத்தினுடைய தொட்டிலாக திகழ்கின்ற மொழி என்கிற வகையில், தமிழை நாங்கள் ஒருபோதும் அழியவிட மாட்டோம் என்று தமிழ் மையம் அமைப்பினர் நிறுவனர் பாதிரியார் ஜெகத் காஸ்பர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு குறித்தும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்து குறித்தும் பிரபல தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதிரியார் ஜெகத் கஸ்பர் பேசியதாவது:- கருவறைக்குள் ஒரு மொழி போதும் என்று வலிந்து, வரிந்துகட்டிக் கொண்டு நிற்கிறவர்கள், வகுப்பறைக்குள் மூன்று மொழி வேண்டும் என்று வந்து நிற்பது இந்த காலகட்டத்தினுடைய ஒரு புரியாத முரண். இதைப் பற்றி நாம் ஒன்றும் தரவுகள் தருவதற்கு தேவை இல்லை. காரணம் நீங்கள் மத்திய அரசு தருகிற தரவுகளை எடுத்துப்பார்த்தாலே, மனிதவள மேம்பாட்டு குறியீடுகள் என்று எடுத்துக்கொண்டால் இந்திய மொழியினுடைய இதயப்பரப்பு உத்தரபிரதேசம், பிகார், சட்டீஸ்கர், உத்தரகாண்ட் பகுதிகள். அனைத்து மனிதவள மேம்பாட்டு குறையீடுகளில் தமிழகத்தை விட ஒரு மடங்கு அல்லது 2 மடங்கு குறைவாக இருக்கின்றன.

உலகப் பரப்பில் இன்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிற பேராளுமைகள், அல்லது எந்த அடிப்படையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு உலகப் பரப்பிற்கு பயணப்படுகிற போது, ஐரோப்பிய நிலப்பரப்பில், வடஅமெரிக்க நிலப்பரப்பில் இந்திய பாஸ்போர்ட்டை பார்த்தாலே எதோ திருடன் வருவது போல தான் பார்ப்பார்கள். ஒரு மரியாதையாக பார்க்க மாட்டார்கள். ஆனால் இன்று பயணங்கள் மேற்கொள்ளப் படுகின்றபோது மதிப்போடு பார்க்கிறார்கள். அந்த மதிப்பை உருவாக்கித் தந்தது எந்த வடஇந்திய மாநிலமும் அல்ல. இன்று காலில் விலங்கிடப்பட்டோ அல்லது கயிற்றால் கட்டப்பட்டோ அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்படுகிற அத்தனை பேரையும் பார்த்தீர்கள் என்றால் வடநாட்டவர்கள் தான். நான் இன்னும் தமிழர்களையோ யாரையும் பார்க்கவில்லை.

உலகப் பரப்பில் இன்று விரிந்து தமிழர்கள் உயர்ந்திருக்கிறாரகள் என்றால், அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அதில் சமூகநீதி அரசியல் என்கிற அடிப்படையும், தமிழகத்தின் இருமொழி கொள்கையும் மிக முக்கியமானது என்பதை நாம்  மறுக்கவே முடியாது. இந்த இருமொழி கொள்கையால் தோற்றுவிட்டது என்று எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்று எனக்கு புரியவே இல்லை. பள்ளிக்கல்வி முடித்துவிட்டு உயர்க்கல்விக்கு செல்பவர்களினுடைய அளவீடு என்று பார்க்கின்றபோது, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடுதான் இருக்கிறது. அது எப்படி நடந்தது?. நீங்கள் இந்திபேசும் மாநிலங்களில் உயர்க்கல்வியை ஒப்பிட்டு பாருங்கள். உயர்க்கல்விக்கு பதிவாகின்ற எண்ணிக்கையை எடுத்து பாருங்கள். தமிழ்நாட்டின் பக்கத்திலேயே உத்தரபிரதேசம் வர முடியாது. இதையெல்லாம் எப்படி சாதித்தோம். வெறும் இருமொழி கொள்கை என்று நான் சொல்லவில்லை. சமுகநீதி என்கிற அரசியல் பின்புலத்தில் இருமொழி கொள்கையும் மையமாக இருந்த காரணத்தால் தான். மூன்றாவது இது ஏன் தோற்றுப் போகவில்லை?. இன்றுதான் உயிர்த்துடிப்பு பெறுகிறது என்பது என்ன என்றால், எந்த அடிப்படையில நீங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்க வருகிறீர்கள் என்கிற ஒரு கேள்வி இருக்கிறது அல்லவா?

dharmendra pradhan

வயதில் மூத்ததா? நாகரீகத்தில் மூத்ததா?, இலக்கிய செழுமையில் மூத்ததா?  இலக்கண சிறப்பில் மூத்ததா?  ஒரு மொழியியலாளனாக நான் சொல்கிறேன். இலத்தீன் மொழி தெரியும். கிரேக்க மொழி, எபிரேயம் படித்தவன். இன்னும் ஒருசில மொழிகளையும் படித்தவன் என்கிற வகையில் இந்த வாதத்தை என்னால் முன்வைக்க முடியும். இலக்கண அடிப்படையிலோ, இலக்கிய அடிப்படையிலோ, வரலாற்று அடிப்படையிலோ, ஏன் சமூகநீதி கோட்பாடுகள். அந்த மொழி எங்களுக்கு சொல்லித் தந்ததோ அல்லது நீங்கள் எல்லாம் எங்களுக்கு சொல்லித் தந்தது என்பது. வெற்றி பெறுவதற்கு நீங்கள் எதுவும் செய்துகொள்ளலாம் என சொல்லித்தருகின்ற மொழி உங்களுடையது. ஆனால் எங்கள் மொழி அப்படி அல்ல. “ஈன்றாள் பசிக்காண்பாள் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை” என்று அறம் சொல்லித்தருகிற மொழி. ஆக எந்த வகையிலும் சிறப்பு பெறாத ஒரு மொழியை, எங்கள் மீது நீங்கள் கொண்டு வந்து திணிப்பதற்கு என்ன முகாந்திரம் இருக்கிறது என்கின்ற கேள்வி எழுகிறது.

45 - பெரியாரைத் துணைக்கோடல்- கலைஞர் மு.கருணாநிதி விளக்க உரை

அதுவும் இன்று முக்கியமாக சிந்துவெளி நாகரிகச் சிறப்புகளும், கீழடியின் ஒப்புமைகளும் புதிய ஒரு கதையாடலை உருவாக்கின்றபோது, இந்திய துணைக் கண்டத்தின் நாகரிக ஊற்று என்பது எது? செத்துப்போன வெறும் 40 ஆயிரம், 25 ஆயிரம் பேர் பேசுகின்ற ஒரு மொழியினுடைய பொதியை சுமந்து வருகிற இந்தி மொழிதான் துணை கண்டத்தினுடைய ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமா? இல்லை இன்றும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”, “யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்று நாகரிகம் கற்றுத்தருகிற உயிர்த்துடிப்பான இந்த மொழி. சிந்து சமவெளிக்கும், கீழடிக்கும் எழுத்து வடிவம் ஒப்புமையாக இருக்கிறது என்கிறபோது, சிந்து வெளிக்கான உரிமை கோரல். தமிழர்களாகிய நாம் எல்லோரும் ஒன்றை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். மொழிவாரி மாநிங்கள் பிரிக்கப்பட்ட அடிப்படையில் இருந்து தயவு செய்து தமிழ் மொழியை பார்க்காதீர்கள். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தமிழ் என்பது இந்த தமிழ் நிலப்பரப்பில் சுருக்கப்பட்டிருப்பதாக தான் ஓரு பேரிடர் நிகழ்ந்தது. ஆனால் இன்று சிந்துவெளி நாகரிக கண்டெடுப்புகளும், அறிதல்களும், கீழடி கண்டெடுப்புகளும், அறிதல்களும் இந்திய துணைக்கண்டத்தின் நாகரிகத்திற்கு உரிமை கோரல் இருக்கிறது என்றால் முதல் தகுதி தமிழுக்குத்தான் இருக்கிறது. எனவே மாண்புமிகு அமைச்சருக்கு சொல்லுங்கள். இந்தியாவின் ஆட்சி மொழியாக நீங்கள் ஒன்றை அமர்த்த வேண்டும் என்றால் அந்த தகுதி இந்தி மொழிக்கு கிடையாது. தமிழ்மொழிக்குதான் அந்த தகுதி இருக்கிறது என்பதை நாம் எடுத்துச்சொல்லியாக வேண்டும்.

5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பை பயன்படுத்தியவர்கள் தமிழர்கள் - திராவிடர்களே மூத்த குடிமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இன்னொன்று ஏன் நாம் ஏற்க மறுக்கிறோம் என்றால் அது ரொம்ப ரொம்ப முக்கியமானது. எங்களுக்கு ஒரு வரலாற்று நினைவு இருக்கிறது. அது என்ன என்றால் எங்கள் மொழி, தமிழ் மொழி இந்த நிலப்பரப்பில எந்த மொழியையும் அழிக்கப் போனது இல்லை. ஆனால் எங்கள் மொழியை நீங்கள் அழிக்க வேண்டும் என 2 ஆயிரம், 3 ஆயிரம் ஆண்டுகளாக வரிந்துக்கட்டி கொண்டிருக்கிறீர்கள். நான் குமரி மாவட்டத்துக்காரன். குமரி மாவட்டத்தின் தமிழ்மொழி பேச்சு வழக்கு வேறாக இருக்கும். கொங்கு நிலத்தின் தமிழ்மொழி பேச்சு வழக்கு வேறாக இருக்கும். ஒவ்வொரு நிலப்பரப்பிலும் அந்த ஒலி வடிவம் என்பது மாறுகிறது. இன்றும் சொல்கிறேன் ஏன் நான் கேரள மாநிலத்தவர்களையோ, அல்லது கர்நாடக மாநிலத்தவர்களையோ பெரும்பான்மை சமுதாயத்தினரை நான் பகைச்சமூகமாக பார்ப்பது இல்லை. தமிழர்களினுடைய நீட்சியாக பார்ப்பது என்றால் கேரளத்தின் ஈழவ சமூக மக்களோ, புழையர் சமூக மக்களோ, சாம்பவர் சமூக மக்களோ, மீனவர் சமூக மக்களோ, அங்கு வாழ்கிற நாடார் சமூக மக்களோ அவர்கள் எல்லாம் மலையாளம் பேசி பிறந்தவர்கள் அல்ல. மாறாக அந்த நிலப்பரப்பில் சமஸ்கிருதம்  சென்று, சதி செய்து, தமிழைக்கொன்று மலையாளம் என்கிற ஒரு புதிய மொழியை உருவாக்கிய ஒரு நினைவு எங்களுக்கு உண்டு. ஒரு துயர நினைவு அல்ல. சோக நினைவு அல்ல. வலியின் நினைவுகள் உண்டு.

நெருக்கடிக்குள் இந்தியா - புதிய அரசுக்கு காத்திருக்கும் சவால்

அது கர்நாடகம் ஆக இருக்கட்டும், ஆந்திர பகுதிகளாக இருக்கட்டும். தொல்குடிகளாக வாழ்ந்தவர்கள் பேசிய தமிழ் மொழியை கொன்று புதிய புதிய மொழிகளை நீங்கள் உருவாக்கினீர்கள் என்கின்றபோது, தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சியினரும் சமூக நீதி அரசியலும்,  இருமொழி கொள்கையே எங்களுக்கு போதும். தமிழ் மொழிக்கு இந்த இடர் ஆங்கில மொழியால் இருக்கிறது. தமிழ்வழிக்கல்வி என்பது பேசப்பட வேண்டும் என்பது வேறு விஷயம். ஆனால் இன்று வரைக்கும் எங்கள் மொழியை நாங்கள் காக்க முடிந்திருக்கிறது. எந்த மொழியையும் அழிக்க முயன்றவர்கள் அல்ல நாங்கள். எங்கள் மொழியை நாங்கள் எங்கள் நிலத்திலேனும் பாதுகாக்க விரும்புகிறோம். ஏனென்றால் இது வெறும் பேச்சுக்கான மொழி அல்ல. தொடர்புக்கான மொழி அல்ல. ஒரு மாபெரும் நாகரீகத்தினுடைய தொட்டிலாக திகழ்கின்ற மொழி என்கிற வகையில், மொழியை நாங்கள் ஒருபோதும் அழியவிட மாட்டோம் என்று மத்திய அமைச்சரிடம் சொல்ல வேண்டும், இவ்வாறு அவர்  தெரிவித்தார்.

MUST READ