தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தேரிப்பனையில் வீட்டில் தனியாக இருந்த போலீஸ்காரரின் தாயை கொலை செய்து நகையை பறித்து சென்ற சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த செல்வரதி என்ற இளம்பெண்ணை கைது செய்து மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம் அருகே உள்ள தேரிப்பனை சிஎஸ்ஐ கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால் மனைவி வசந்தா(70). ஓய்வு பெற்ற அங்கன்வாடி பணியாளரான இவருக்கு சபிதா என்ற மகளும் வினோத் மற்றும் விக்ராந்த் என்ற மகன்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர். சபிதா, வினோத் ஆகியோர் கோயம்புத்தூரிலும், போலீஸ்காரரான விக்ராந்த் சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் வேலை பார்த்து வருவதுடன் குடும்பத்துடன் அருகேயுள்ள ஆனந்தபுரத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் வசந்தா தினமும் மாலை நேரங்களில் அருகிலுள்ள வீடுகளில் அமர்ந்து பேசுவது வழக்கம் எனக் கூறப்படுகிறது. ஆனால் திங்கள் கிழமை வசந்தா வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததால் அருகில் வசிப்பவர்கள் சந்தேகம் அடைந்து அவரது வீட்டை பார்க்கும் போது வழக்கத்திற்கு மாறாக வீட்டின் ஜன்னல்கள் கதவுகள் பூட்டப்பட்டு கிடந்ததையடுத்து அவரது மகனான போலீஸ்காரர் விக்ராந்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அவர் தொடர்ந்து தாயின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனையடுத்து அவரது உறவுக்கார பையன் ஒருவனிடம் ஆனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் சாவியை வாங்கி வந்து திறந்து பார்க்கும் படி கூறியுள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் உள்பக்கம் பூட்டி இருந்த நிலையிலிருந்து உள்ளது. இதனால் திறக்க முடியாத நிலையில் வீட்டில் பின் பக்கமாக சென்று பார்த்தபோது கதவு திறந்து நிலையில் கிடந்துள்ளது. இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வசந்தா இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீஸ்காரர் விக்ராந்த் நேரில் சென்று பார்க்கும்போது வசந்தா அணிந்திருந்த ஏழு பவுன் தங்கச் செயின் அறுத்து எடுக்கப்பட்ட நிலையில் கம்மல்களை கழற்றி எடுத்து சென்றுள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து மாவட்ட ஏடிஎஸ்பி திபு, டிஎஸ்பிக்கள் சாத்தான்குளம் சுபகுமார், திருச்செந்தூர் மகேஷ் குமார், உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வசந்தா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாவட்ட எஸ்பி ஆல்பர்ட்ஜான் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். மோப்பநாய் ஜியா வரவழைக்கபட்டு வீட்டிலிருந்து வெளியே வந்து தெருக்களை சுற்றி நின்று விட்டது. இந்நிலையில், வசந்தா கொலை செய்யப்பட்டது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த செல்வரதி (24) என்ற பெண்ணை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து நகைக்காக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதியவர் விபத்து குறித்த சிசிடிவி காட்சி சிக்கியது…சிறுவனின் தாய் கைது!