சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி வேன் ஓட்டுநர் கைது
சென்னை திருமங்கலம் கேந்திரிய பள்ளியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வேன் ஓட்டுனரான பாஜகவின் அம்பத்தூர் 90வது வார்டு தலைவர் ரமேஷ் (வயது 40) போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேன் ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ ஆதாரத்துடன் பெற்றோர் புகாரளித்துள்ள நிலையில் பல குழந்தைக்கு ரமேஷ் பாலியல் தொல்லை கொடுத்திருப்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரவாயில் ஆலப்பாக்கத்தை சேர்ந்த 32 வயது பெண் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது 9 வயது மகள் சென்னை திருமங்கலத்தில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருவதாகவும், இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக சோர்வாகவும் பதட்டமாகவும் இருந்ததால் சந்தேகம் ஏற்பட்டது.
நீண்ட நேரம் தன் மகளிடம் என்ன நடந்தது என விசாரணை செய்ததாகவும், அதனை தொடர்ந்து சிறுமி சில அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்ததாகவும் தான் பள்ளிக்கு தினமும் வேனில் அழைத்து செல்லும் டிரைவர் மாமா ‘பேட் டச்’ செய்ததாக கூறியதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து மறைமுகமாக கண்காணித்த நிலையில் சிறுமையிடம் டிரைவர் பாலியல் சீண்டல் செய்தது தெரிய வந்த நிலையில், மேலும் பல சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆதாரம் வேண்டும் என்பதால் வீடியோ ஆதாரத்துடன் எடுத்து, சிறுமியின் தாய் திருமங்கலம் உதவி ஆணையர் வரதராஜ் அவர்களிடம் பரபரப்பு புகார் கொடுத்தார்.
இதனையடுத்து வில்லிவாக்கம் குழந்தைகள் நல அதிகாரி ஜோஸ்பின் மற்றும் திருமங்கலம் அனைத்து மகளிர் ஆய்வாளர் விஜயலட்சுமி, விசாரணை செய்ததில் பள்ளி வேன் ஓட்டுனரான ரமேஷ் பாடி பகுதியை சேர்ந்தவர் என்றும், இவர் பாஜகவின் அம்பத்தூர் 90 வது வார்டு தலைவர் என்பது தெரிய வந்த நிலையில் அவரிடம் மிகவும் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ரமேஷ் கடந்த ஒரு மாதமாக தான் பள்ளி வேன் ஓட்டி வருவதாகவும். அவருடைய வண்டிக்கு தினக்கூலிக்கு ஓட்டுநர் வைத்திருந்த நிலையில், அவர் இல்லாததால் இவர் தன் வாகனத்தை இயக்கியதாகவும் தெரியவந்தது.
மேலும் பெற்றோர்கள் வீடியோ ஆதாரத்துடன் அளித்த புகாரின் அடிப்படையில் ரமேஷ் (48) மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய பள்ளியில் இது போன்ற நடந்த பாலியல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பள்ளி வாகனம் அல்லாத தனியார் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.