சேலத்தில் குடோனில் இருந்து அசாமிற்கு கண்டெய்னர் லாரியில் கடத்தி சென்ற ₹ 4.5 கோடி மதிப்புள்ள செம்மரம் பறிமுதல்! 3 கடத்தல்காரர்கள் கைது. திருப்பதி செம்மரக்கட்டை கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார்
திருப்பதி செம்மரக்கட்டை கடத்தல் தடுப்பு அதிரடிப் படை போலீசார் சித்தூர் மாவட்டம், குடிபாலா மண்டலம் சித்தூர் – வேலுரு சாலையில், பானட்டூர் அருகே உள்ள கீழ்ப்பாலத்தில் திடீர் வாகனச் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரி வந்தது. லாரியில் இருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தூரத்தில் நிறுத்திவிட்டு மூன்று பேர் இறங்கி தப்பி ஓட முயன்றனர். அதிரடிப் படை போலீசார் அவர்களைப் விரட்டிப் பிடித்தனர். பின்னர் கண்டெய்னர் லாரியை சோதனை செய்ததில் அதில் செம்மரக்கட்டைகள் கடத்தி செல்வது தெரியவந்தது.
பிடிப்பட்ட மூவரில் சென்னையைச் சேர்ந்த நரேந்திர குமார் என்கிற மணி, அசாமில் இருந்து பினாய் குமார் பகத் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த விஜய் ஜோஷி ஆகியோர் என்பதும் இவர்கள் சேலம் அருகே உள்ள ஒரு குடோனில் இருந்து அசாமுக்கு சட்டவிரோதமாக செம்மரக் கட்டைகளை கடத்தி செல்வது தெரியவந்தது.
இந்த கடத்தலில் உள்ள முக்கிய கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரத்தின் மதிப்பு சுமார் ₹ 4.5 கோடி இருக்கும் என அதிரடிப்படை எஸ்.பி.சீனிவாஸ் தெரிவித்துள்ளார்.