ஆவடியில் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை 8 அணி காவலரை பொது மக்கள் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி, பக்தவச்சலாபுரம், ஐயப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராதா(55). இவர் அதே பகுதியில் ஜெயராஜ் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது கடைக்கு வந்த நபர் ஒருவர், பொருட்கள் வாங்குவது போல் நடித்து, ராதாவின் கழுத்தில் கிடந்த 15 சவரன் தங்க செயினை பறித்து, தப்பி ஓடிய போது, பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்தனர்.
பின், மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்த ஆவடி போலீசார், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ராமநாதபுரம் மாவட்டம், தலையாடி கோட்டை பகுதியைச் சேர்ந்த பொக்கர், 32. தமிழ்நாடு சிறப்பு காவல் படை 8 அணியில் காவலராக பணியாற்றி வருவதாகவும் சென்னைக்கு தபால் கொடுக்க வரும் போது செயின் பறிப்பில் ஈடுப்பட்டதும் தெரியவந்தது..இது தொடர்பாக ஆவடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
15 நாட்கள் விடுப்பில் தபால் அளிப்பதற்காக சென்னைக்கு வந்து செயின் பறிப்பில் ஈடுப்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலரை பொது மக்கள் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.