கலெக்டரின் உறவினர் எனக் கூறி கும்பகோணம் ஆடிட்டரிடம் 1 கோடி ரூபாய் பறித்த காவல் ஆய்வாளர் நெப்போலியனை தர்மபுரிக்கு சென்று தஞ்சை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா குலசேகரநல்லூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக சுமார் 465 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்காக விளைநிலங்களை அரசு கையப்படுத்தி, தொடர்புடைய நில உரிமையாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது.
அதன்படி கும்பகோணம் ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்த ஆடிட்டரான 68 வயது ரவிச்சந்திரனுக்கு சொந்தமான 80 சென்ட் நிலமும் குலசேகரநல்லூரில் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்தில் 30 தேக்கு மரங்களை ரவிச்சந்திரன் வளர்த்துள்ளார். இதனால் தனது நிலத்தில் வளர்ந்திருந்த 30 தேக்கு மரங்களை ரவிச்சந்திரன் 2020 ம் ஆண்டு வெட்டி வாகனத்தில் ஏற்றி கொண்டு இருந்தார்.
இதை அறிந்த நீர்வளத்துறை அதிகாரிகள் உடனே வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அவர்கள் விரைந்து வந்து 3 டன் எடையுள்ள 207 தேக்கு மரக்கட்டைகளை பறிமுதல் செய்து கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக பந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இதை அரியலூர் மாவட்டம் திருமாந்துறையைச் சேர்ந்தவரும், தற்போது தருமபுரி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான புலனாய்வுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருபவருமான 45 வயது நெப்போலியன் அறிந்து ரவிச்சந்திரனிடம் பேசியுள்ளார்.
அப்போது தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் எனவும், தஞ்சை மாவட்ட கலெக்டர் தனது உறவினர் எனவும், வழக்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்க சிபாரிசு செய்வதாகவும், அதற்கு 1 கோடி ரூபாய் தர வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதையடுத்து ரவிச்சந்திரனிடமிருந்து 1 கோடியை நெப்போலியன் வாங்கியுள்ளார்.
இதன் பின்னரும் தொடர்ந்து ரவிச்சந்திரனிடம் நெப்போலியன் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இது குறித்து ரவிச்சந்திரன் தஞ்சை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்.பி ராஜாராம் உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மபுரிக்கு சென்ற தஞ்சை குற்றப்பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் நெப்போலியனை நேற்று இரவு கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
டிரம்ப் வரி விதிப்பால் தலைவலி..! ரூ.2 லட்சமாக உயரும் ஐபோன் விலை..!