அமேசானில் ஆர்டர் செய்து ரகசிய பேனா கேமராவை பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கழிவறையில் வைத்து வீடியோ பதிவு செய்த மருத்துவர் வெங்கடேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
பொள்ளாச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தினமும் நகர் பகுதிகள், சுற்றுவட்டார கிராம பகுதிகள் மற்றும் வால்பாறை உள்ளிட்ட இடங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர்.மாவட்ட அரசு தலைமை (பொள்ளாச்சி ) மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் நிர்வாக அலுவலகத்தில் உள்ள பெண்கள் பொது கழிப்பறையில் சுத்தம் செய்யக்கூடிய பிரஷில் (Brush) சந்தேகத்திற்கு இடமான வகையில் ரப்பர் பேண்ட் சுற்றப்பட்டு ரகசிய பேனா கேமரா உள்ளதாக செவிலியர் தெரிவித்துள்ளார்.
அப்போது பணியில் இருந்த ஆர் எம் ஓ மாரிமுத்து மற்றும் மூன்றாம் ஆண்டு எம் எஸ் ஆர்த்தோ பயிலும் மருத்துவர் வெங்கடேஷ் ஆகியோருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து மாரிமுத்துவும் மருத்துவர் வெங்கடேசன் கழிவறைக்குச் சென்று பார்த்து அங்கு ரகசிய கேமரா இருப்பதை உறுதி செய்தனர்.இதன் அடிப்படையில் பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ராஜா கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் தலைமையில் பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். மருத்துவமனையில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கீழ்குப்பம் பனமரத்துப்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (33) என்ற மருத்துவர், தற்போது கோவை மருத்துவமனையில் எம்எஸ் ஆர்த்தோ மூன்றாம் ஆண்டு பயின்று வருபவரும், கடந்த 15 நாட்களாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தவருமான மருத்துவர் வெங்கடேஷ்,சம்பவம் நடந்த அன்று கழிவறைக்கு அடிக்கடி சென்று வந்தது தெரிய வந்தது.
மேலும் சம்பவம் நடந்தபோது பிரஷில் இருந்த ரகசிய கேமராவிலிருந்து மெமரி கார்டை எடுத்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து பயிற்சி மருத்துவர் வெங்கடேஷ் கழிவறையில் கேமரா பொருத்தியதை ஒப்புக்கொண்டார். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அமேசான் ஆப் மூலம் பேனா கேமராவை வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். வெங்கடேசை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் மெமரி கார்டு ஆகியவற்றை கைப்பற்றி,மருத்துவர் வெங்கடேசை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இறை நம்பிக்கையை உடைத்த இசைவாணி… வெடித்துக் கிளம்பிய வழக்கறிஞர்..!